தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடரும் “கொரோனா“ கொடுமை – பள்ளியில் சேர முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

தொடரும் “கொரோனா“ கொடுமை – பள்ளியில் சேர முடியாததால் உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

Priyadarshini R HT Tamil
Feb 07, 2023 12:01 PM IST

கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாததால், பள்ளிப்படிப்பை நிறுத்திய சிறுமி, மீண்டும் பள்ளி செல்ல தனது தாயிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரால் சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை. இதனால் மனமுடைந்ம சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள செம்பழனி கிராமம் புதுக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி உமா. கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் மகள் ரஞ்சனி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு 9ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கொரோனா தொற்று பரவியதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், பொது முடக்கமும் செய்யப்பட்டது. அதன் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா காலத்தில் அவர்கள் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியிருந்தனர். அதனால் அவரது தாயால் அவரை மீண்டும் தனியார் பள்ளியில் சேர்க்க இயலவில்லை. அதற்குப்பின்னர், இந்தாண்டிலாவது பள்ளியில் சேர்த்துவிட வலியுறுத்தினார். அவ்வப்போது அவர் பள்ளி செல்ல வேண்டும் என்று அவரது தாயிடம் கெஞ்சி வந்துள்ளார். ஆனால் குடும்ப சூழலை காரணம் காட்டி அவரது தாய் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் வரும் கல்வியாண்டிலாவது பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என்று ரஞ்சனி கேட்டுள்ளார். ஆனால், அவரது தாய் உனக்கும் வயதும் 18 ஆகிவிட்டது. இனிமேல் 9ம் வகுப்பு படித்து என்ன செய்யப்போகிறாய். எனவே வீட்டி வேலைகளை கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடும்படி கூறியுள்ளார். 

இதனால் ரஞ்சனி மனமுடைந்து காணப்பட்டார். தான் பள்ளி செல்லாதது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் அவர் வருந்தி அழுதுள்ளார். 

இந்நிலையில் கடந்த 1ம் தேதி அவரது தாய் வேலைக்கு சென்றிருந்தபோது ரஞ்சனி எலி மருந்தை வாங்கி அருந்தியுள்ளார். இதனால், வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்து, ரஞ்சனியின் தாயார் உமா அளித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

IPL_Entry_Point

டாபிக்ஸ்