Father of Tamil Typewriter : தமிழ் தட்டச்சின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம் இன்று!
Father of Tamil Typewriter : தமிழ் தட்டச்சின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம் இன்று!
ஆங்கிலேயர் அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும், ஆங்கிலம் உலக மொழியானதற்கும் தட்டச்சு அதாவது டைப்ரைட்டர் ஒரு முக்கிய காரணம். 1872ம் ஆண்டு ரெமிங்டன் டைப்ரைட்டர் விற்பனைக்கு வந்தபோது வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் அதை வாங்கி உபயோகிக்க முன்வந்தன. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன.
அதனால் ஆங்கில தட்டச்சில் அதை வடிப்பது எளிதாக இருந்தது. ஆனால் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு எப்படி தட்டச்சை கொண்டுவருவது என்பது குழப்பமாக இருந்தது.
மேலும் தமிழில் இன்னும் சில சமஸ்கிருத எழுத்துக்களும் பயன்படுத்தப்படும். மேலும் அதில் உள்ள குறியீடுகள் வடமொழிகள் மூலம் வந்த கிரகந்த எழுத்துக்கள் என அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
எப்படி தட்டச்சு இயந்திரத்தை வடிவமைப்பது என குழம்பியவர்கள் பலர், இதை செயலாக்க முடியாமல் திணறியபோது, இதை செயலாக்கியவர் ஆர்.முத்தையா, தமிழ் தட்டச்சின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறது.
இலங்கை பாழ்யாணத்தில் உள்ள சுண்டிக்குழியில், 130 ஆண்டுகளுக்கு முன்னர் 1886ம் ஆண்டு பிறந்தவர் ஆர். முத்தையா. இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களுள் ஒருவர். 7 வயதில் தந்தையையும் ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தாயையும் இழந்தார். உறவினர்களின் ஆதரவில் கல்வி பெற்றார்.
21 வயதில் மலேசியா – சிங்கப்பூர் இடையிலான மலாயவுக்கு சென்றார். அங்கு ரயில்வே துறையில் வேலையில் சேர்ந்தார். சில நாட்களுக்குப்பின்னர், வேலையை விட்டு, ஐல்ஸ் பெரி அண்ட் கார்மன்ட் என்ற பிரபல வர்த்தக நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.
சொந்த முயற்சியில் முன்னேறியவர், அரசு வேலையை எதிர்பார்க்கவில்லை இந்த திறமைக்காரர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்கு சரியென்று பட்டதை துணிவுடன் கூறியவர் செய்து காட்டியவர்.
இவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத்திறமையும் இவரை பெரிதும் கவர்ந்தது. இவர்களைப்போல் ஒரு தமிழரும் ஏன் இல்லை என அவர் வருந்தினார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாத குறையை நினைத்து அவர் வருந்தினார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல், தமிழில் ஒரு தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணியவர், அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசையில் 46 பட்டன்களுக்குள் அடக்குவது அவருக்கு பெரும்பாடாக இருந்தது. எனவே பல எழுத்துக்களுக்கு பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனியாக பட்டன்களில் அமைத்தார்.
இரண்டு பட்டன்களை அழுத்திய பின்னரே அச்சு நகரவேண்டும் என்று நகரா பட்டன் என்ற தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தினார். சிறந்த எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு தமிழ் தட்டச்சு இயந்திரத்தை அவர் உருவாக்கினார்.
அதற்கு ஸ்டாண்டர்ட் தட்டச்சு என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துக்கள் கொண்ட தமிழ்மொழியை தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென்று பிரத்யேகமான தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார்.
இந்த சாதனையை படைத்த முத்தையா சிறந்த சமூக சேவகராக இருந்துள்ளார். இலங்கையில் நடந்துள்ள வகுப்பு கலவரங்கள் குறித்து அவர் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதினார். ஆனால் அந்த புத்தகம் அச்சாவதற்கு முன்னரே காலமானார். தட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்து போனாலும், நாம் கம்யூட்டர் மூலம் செய்யும் தட்டச்சுக்களுக்கு ஆதார மூலமாக இருந்தவர் முத்தையா.
தமிழ் தட்டச்சுப்பொறி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், நமது இன்றைய முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்க முடியாது. எனவே, முத்தையா.ஆர். தமிழ் உலகம் மறக்க முடியாத மற்றும் மறக்க கூடாத ஒரு ஆளுமையாவார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9