தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வேதனை.. தக்காளி விலை வீழ்ச்சி - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த விவசாயி!

வேதனை.. தக்காளி விலை வீழ்ச்சி - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த விவசாயி!

Divya Sekar HT Tamil
Apr 09, 2023 12:09 PM IST

பல்லடம் அருகே விலை வீழ்ச்சியால் பயிரிடப்பட்ட தக்காளியை டிராக்டர் மூலம் விவசாயி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த விவசாயி
டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த விவசாயி

ட்ரெண்டிங் செய்திகள்

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி அவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது.

தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது.

தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்