தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Mk Stalin: மீனவர்கள் பிரச்னை ..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CM MK Stalin: மீனவர்கள் பிரச்னை ..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Karthikeyan S HT Tamil
Jul 20, 2023 10:32 AM IST

CM MK Stalin letter To PM: இலங்கை அதிபர் டெல்லி வரவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி (கோப்புபடம்)
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கச்சத்தீவு, வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருவதையும், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றிய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர், 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக 2 நாள் பயணமாக புதுதில்லி வரவுள்ளார். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் பூகோளரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்டகாலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி. அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் இந்தியப் பிரதமர் பேசி, தீர்வு காணுமாறு கோரியுள்ளார்.

கச்சத்தீவு, வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருவதையும், இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றிய அரசு ஒப்பந்தம் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு அடுத்த நாளான 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசும் மறுபரிசீலனை செய்து திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியதை நினைவுகூர்ந்த மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மீனவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்" கச்சத்தீவை மீட்டுத் தருமாறு 22.9.2006 அன்று அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் மீண்டும் கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், நமது கடலோர சமூகங்களுக்கு கணிசமான பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது; என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தெரிவித்ததாகவும், 1974 ஜூன் 26, 28 தேதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தமும், 1976 மார்ச் 23 ஆம் தேதியிட்ட ஒப்பந்தமும், கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்ப்பது தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என்றும், செல்லாதவை என்றும் அறிவிக்கக் கோரி 2013 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக தான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2022-ம் ஆண்டு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் எனத் தான் வைத்த வேண்டுகோளை நினைவுகூர்ந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் உள்ளதாகவும், அத்துமீறி நுழைவதாக இலங்கைக் கடற்படையினர் குற்றஞ்சாட்டிக் கைது செய்து, துன்புறுத்தும் சூழல் உள்ளதாகவும், பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டுமென்றும், பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிடவும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்