Top 10 News:தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, கமல் ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.. மேலும் செய்திகள்
தமிழகத்தின் ஓரி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, திமுகவை அழிக்க பலர் கிளம்பி விட்டனர் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு. மேலும் டாப் 10 தமிழக செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

Top 10 News:தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, கமல் ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.. மேலும் செய்திகள்
“திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளனர், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களே தகுந்த பதிலடியை தருவார்கள். திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என பிரிந்து கிடக்கும் அதிமுகவும், பாஜகவும் எதிர்பார்க்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. 2026 தேர்தலில் 2வது முறை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க நாம் உழைக்க வேண்டும்" என தஞ்சையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
- திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெறும் அண்ணாமலையார் திருக்கோயிலின் மகா ரதம் வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது. 59 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்ட மகா ரதம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு மாட வீதியில் ஆடி அசைந்தவாறு வலம் வர உள்ளது.
- மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பட்டியலின சான்று வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்ததை கண்டித்து, காட்டுநாயகன் சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கூட புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோடு சின்ன சடையம்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் பதுங்கி இருந்த 5 அடி நீள கோதுமை நாகப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பாம்புபிடி வீரர் யுவராஜ், பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். காப்புக்காட்டில் பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
ஆதரவற்ற விதவை சான்றிதழ்
- ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற எவ்வித துணையுமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என பொருளல்ல. அவர்கள் இருந்தும் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அனுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்பதே பொருளாகும். மதுரை எம்.பி., சு.வெங்கடேசனின் கோரிக்கையை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,320 குறைந்துள்ளது.
- சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் 10ம் தேதி திறக்கப்படவுள்ளது. 85 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில், மீன் கழிவுகளை வெளியேற்ற 28,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கமல்ஹாசனுக்கு வாழ்த்து
- பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொண்டாட்டமாக இருக்கிறது. இன்று மாலை நடைபெறவுள்ள சூரசம்கார நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள் வந்துகொண்டு இருக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாழைத்தண்டு, பழ வகைகளை நறுக்கி தயிருடன் கலந்து முருகனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.
- மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.