முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றி.. நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்.. வைரலாகும் எக்ஸ் தள பதிவு!
Amaran : தன்னுடைய அழைப்பை ஏற்று படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
அமரன் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் நேற்று படம் வெளியான நிலையில் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்றனஎ. இந்த நிலையில் படத்தை தயாரித்த நடிகர் கமல் ஹாசனின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (31-10-2024) இரவு படக்குழுவினருடன் அமரன் படத்தை கண்டுகளித்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தனர். படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
அதில், “நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் கே.பி , மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் #Amaran படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute!” என பதிவிட்டிருந்தார்.