Top 10 News : விஜய்யின் கொள்கைகள் குறித்து சீமான் கடும் விமர்சனம்.. சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விஜய்யின் கொள்கைகள் குறித்து சீமான் கடும் விமர்சனம், சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
சீமான் கடும் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் கொள்கைகள் குறித்து சீமான் கடும் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் சீமான் விஜய்யை மிக கடுமையாகத் தாக்கி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, “ உன் கொள்கைகள் என்ன? கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு. நீ நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப் போயிடுவ. விடுதலைப் போராட்டத்தில் மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் பக்கம் நில்லு. இல்ல மவுண்ட் பேட்டன் பக்கம் நில்லு. நான் நடுநிலை என்கிறாய். இது நடுநிலை அல்ல. மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. வந்தாச்சு. நான் என் கருவிலே என் எதிரி யார்? என்று தீர்மானித்துவிட்டு பிறந்தவன். எவன் என் இனப்பகைவன் என்று முடிவெடுத்துவிட்டு வந்தவன்.”என பேசினார்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை, திருப்பூர். கோவை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 4 வரை 12,846 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கி தவித்த 150 பக்தர்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு சென்றுவிட்டு அங்குள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந்த நிலையில் திடீரென அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலுக்குச் சென்ற பெண்கள் உட்பட சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பட்டாசு வெடித்து சிறுவன் பலி
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சேதுநகர், மைகுண்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் கரண்ராஜ் (12). இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாட ராமேஸ்வரம் புதுரோட்டில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். அங்கு நேற்று முன்தினம் இரவு, சிறுவன் கரண்ராஜ் வாணவெடியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக வாணவெடி சிறுவனின் முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பட்டு வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டு பட்டாசுகள் வெடித்து இருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இருதயராஜ் மகன் ஆண்டனி பிரேம்குமார்(24), வின்சென்ட் மகன் பவுல்ராஜ் (22), யூநேக் மகன் டேவிட் வின்சென்ட் (22). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் இரவு ஒரு பைக்கில் எறையூர் பாளையம் கிராமத்திற்கு சென்று அங்கு நாட்டு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மீண்டும் எறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அதில் இருந்து வந்த தீப்பொறி டேவிட் வின்சென்ட் வைத்திருந்த நாட்டு பட்டாசு மீது விழுந்ததில், நாட்டு பட்டாசுகள் பயங்கரமாக வெடித்தது. இதில் டேவிட் வின்சென்ட் உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.
முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தீபாவளியன்று காற்று மாசுவின் தரவு வெளியீடு
தீபாவளியன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 என்ற அளவில் காற்று மாசு இருந்துள்ளது. இருப்பினும், காற்று மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது.
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
சென்னையில் வழக்கமாக 5500 மெட்ரிக் டன் குப்பைகள் வீடு களில் இருந்து சேகரிக்கப்படும். பட்டாசு வெடித்ததின் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கியது. மொத்தம் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது.
டாபிக்ஸ்