TAMILNADU TOP 10: விஜய்யால் முக்கிய முடிவெடுக்க உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் சிக்கலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் வரை
தவெக மாநாட்டிற்கு பின் முக்கிய முடிவு எடுக்க உள்ள அதிமுக முதல் சகோதரனால் சிக்கலில் இருக்கும் ஓபிஎஸ் வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு காணலாம்.
தவெக மாநாட்டிற்கு பின் முக்கிய முடிவு எடுக்க உள்ள அதிமுக முதல் சகோதரனால் சிக்கலில் இருக்கும் ஓபிஎஸ் வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு காணலாம்.
1. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி ஆரம்பித்தது தொடர்பாகவும், அவரை கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
2. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதனைக் காண, லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சஷ்டி விழாவின் 4ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 18 ஆண்டுகளுக்குப் பின் ஜெயந்தி நாதர் கைகளில் வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சூரசம்ஹாரம் நிகழ்வில் மக்கள் பங்கேற்க ஏதுவாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
3. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காணலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 10 மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
4. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிற்பபு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தீர்ப்பு வழங்கும் தினம் ஓ.ராஜா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு விஜய் தொண்டர்களை எற்றிச் சென்ற வேன் ஓட்டுநர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளனர். அதில், மாநாட்டிற்கு வந்த தவெக தொண்டர்கள் தங்கள் வேனில் வந்ததற்காக பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
6.திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் இயங்கும் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்.25-ம் தேதி திடீரென வாயு நெடி பரவியது. இதன் காரணமாக பள்ளியில் உள்ள 39 மாணவர்கள் மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரித்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இதனால் அவர்கள் பல்துறை வல்லுநர்களின் உதவியை நாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, வாயுக் கசிவால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி 10 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்டது.
7.தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி தொடங்க உள்ள விலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று கூடுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருவதனால், சம்பா சாகுபடிக்காக உரிய அளவு தண்ணீரை திறக்க வலியுறுத்த உள்ளனர்.
8.மகப்பேறு இறப்பை குறைக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து விதமான அரசு அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதனை முறையாக அமல்படுத்தினால், தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு குறையும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.
9.கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்டு வரும் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில் சேவை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக கோயம்புத்தூர்-திண்டுக்கல் வரை இயக்கப்பட்ட ரயில் சேவையை மேலும் தொடர வேண்டும் என கோயம்புத்தூர் ரயில் பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிகிறது.
டாபிக்ஸ்