Tamil Top 10 News: நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு முதல் விமான கட்டணம் இருமடங்கு வசூல் வரை - மாலை டாப் 10 நியூஸ் இதோ..!
சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு, புதிய தலைமைச் செயலகம் வழக்கு, விமான கட்டணம் இருமடங்காக வசூல் உள்பட இன்றைய மாலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், அரசியல் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு
தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது' என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’ என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.