நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணியா.. என்ன சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எப்படி பேசினார் என அனைவருக்கும் தெரியும். அப்போது என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார் , கரப்பான் பூச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார். முதல்வர் தனது நிலை மறந்து எதிர் கட்சி தலைவரை விமர்சனம் செய்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னைப்பற்றி பல விமர்சனங்கள் முன் வைத்துள்ளார்.
2-3 நாட்களாக ஊடகங்கள் வாயிலாக ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார் . மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னைப்பற்றி விமர்சனம் செய்வதாக கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் ஸ்டாலின் எழுதி உள்ளார். நான் அவரை கொச்சைப்படுத்தி பேசுவதாக, எதிர்க்கட்சி நிலையிலிருந்து தவறாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
பதிலடி கொடுப்போம்
எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எப்படி பேசினார் என அனைவருக்கும் தெரியும். அப்போது என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார் , கரப்பான் பூச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார். முதல்வர் தனது நிலை மறந்து எதிர் கட்சி தலைவரை விமர்சனம் செய்கிறார். அதிமுக யாரையும் தவறுதலாக விமர்சனம் செய்வதில்லை. ஆனால் ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள் எங்களை பற்றி தவறுதலாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை என்ற தவறான தகவலை எல்லா இடத்திலும் முதல்வர் சொல்கின்றார் .
அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு பணிகள் செய்யப்பட்டது எனக்கூறிய அவர், கோவை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் செய்த பணிகளை பட்டியலிட்டார்.
அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டி திமுக அரசு திறந்து கொண்டு இருக்கின்றது. 750 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 3 வது கூட்டு குடிநீர் திட்டம்,114 கோடியில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய ஐடி பார்க் , அவினாசி அத்திகடவு திட்டம் என பல திட்டங்கள் அதிமுக கொண்டு வந்தது, அதை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
அவினாசி அத்திகடவு திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டு வரபட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும்,அவினாசி சாலையில் அமைக்கப்படும் பாலம் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் இதை கிடப்பில் போட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்றே தெரியவில்லை எனவும் தெரிவித்தார். இதே போல விமான நிலைய விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் காலதாமதம் செய்ய படுகின்றது எனவும்,
வெள்ளலூர் பேருந்து்நிலையம் 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் அதையும் கிடப்பில் போட்டுள்ளனர் எனவும், கோவைக்கு எதுவும் செய்யவில்லை என சொல்லி திமுகவினர் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் கோவைக்கு திட்டங்களை அறிவித்து வருகின்றனர், ஆனால் எதுவுமே துவங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். எந்த திட்டப்பணிகளுமே நடக்காமல் மாவட்டங்களுக்கு முதல்வர் ஆய்வுக்கு போகின்றார் என தெரிவித்தார்.
2026ல் தவெகவுடன் கூட்டணியா
வரும் 2026ம் ஆண்டு தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதில் அளித்தார். இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கின்றது, தேர்தல் வரும் போதுதான் இதையெல்லாம் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார். இன்னொன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு, ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களோடு இணையலாம் என்று சொன்னதை , உடனே பா.ஜ.கவுடன் மறைமுக கூட்டணி என விவாதம் ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்தார்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போதே தெளிவாக சொல்லி விட்டோம், சட்டமன்ற தேர்தலில் போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பது முன்பே தெரிவிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கின்றீர்கள் என தெரிவித்தார் . ஏற்கனவே முடிவு செய்து அறிவிக்கப்பட்டு விட்டது, திமுக எங்கள் எதிர் கட்சி, அந்த கட்சியின் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்,பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு இதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். அதிமுகவை வைத்து விவாதம் செய்ய வேண்டும் என ஊடகங்கள் இருக்கின்றது எனவும்,
திமுகவில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றது , யாராவது விவாதம் பண்றீங்களா? என கேள்வி எழுப்பினார். ஊடக நண்பர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக செயல் படுகின்றார் என முதல்வர் சொல்கின்றார், அப்படியெனில் வேறு அமைச்சர்கள் யாரும் எதுவும் செய்ய வில்லையா ? அது குறித்து ஏன் ஊடகங்கள் விவாதிக்க வில்லையே என தெரிவித்தார்.
அதிமுக தும்மினால் ஒரு விவாத மேடை, இருமினால் உடனே ஒரு விவாத மேடை வைத்து விடுகின்றீர்கள். அதிமுக என்ற ஒரு கட்சி இருப்பதால்தான் விவாத நிகழ்ச்சியே நடக்கின்றது என தெரிகின்றது எனவும் நடுநிலையோடு இருக்க வேண்டும் எனவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர் கட்சிக்கு ஒரு நீதி என இருக்கின்றீர்கள் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்