இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லையா.. என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.. தவெக கட்சி கொடி நிற துணி அகற்றம்!
நேற்று மாலை 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இது போன்ற மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் இர்பான் செய்தது கொலை குற்றம் இல்லை. மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 கோடி மதிப்பில் 2வது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கோவை அரசு மருத்துவமனையில் 13 கோடி செலவில் இரண்டாவது MRI ஸ்கேன் இன்று திறக்கப்பட்டுள்ளது. 2018 ல் இருந்து ஏற்கனவே ஒரு MRI ஸ்கேன் செயல்பட்டு வருகின்றது. MRI ஸ்கேன் செய்ய இரண்டு,மூன்று தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது.இதையடுத்து ஜப்பான் நிதி ஆதார உதவியுடன் அதிநவின MRI ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
20 நிமிடங்களில் MRI ஸ்கேன்
வழக்கமாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங்கள் ஆகும் என்ற , புதிய MRI ஸ்கேன் மூலம் 20 நிமிடத்திற்குள் எடுத்துக் கொள்ள முடியும். தினமும் 30 முதல் 35 ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், இனிமேல் கூடுதலான MRI ஸ்கேனை துல்லியமாக எடுக்க முடியும். நரம்பியல், இருதவியல், புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை கண்டறிய இந்த MRI ஸ்கேன் உதவியாக இருக்கும். தமிழக முதல்வர் 3.5 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை கொடுத்து இருக்கின்றார். கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் இந்த அரசால் செய்யப்பட்டுள்ளது. புறநோயாளிகளின் எண்ணிக்கை 2021 ல் 3000 வரை இருந்தது. இப்போது 4800 பேராக அதிகரித்து இருக்கின்றது. இது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது.
நலவாழ்வு மையங்கள்
கோவையில் 72 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 45 இடங்களில் நகர்புறநலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. 45 மருத்துமனைகளிலும் ஒவ்வொரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என 4 பணியிடங்கள் நியமிக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வழங்கப்பட்டுள்ளது
இந்த மையங்களில் மருத்துவத்துறை கடமைகளாக காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணிவரையும் செயல் பட வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. நேற்று மாலை 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 500 இடங்களில் இது போன்ற மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 208 இடங்களில் திறக்க வேண்டி இருக்கின்றது என்றார்.
மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு 4500 பேருக்கும் அதிகமாக வருகின்றனர். வாகன நிறுத்தம் செய்வது குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு வருகிறது.என்றார்.
இர்பான் செய்தது கொலை குற்றமில்லை
அதேபோல் யூடியுபர் இர்பான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் செய்தது கொலை குற்றமில்லை. அவர் செய்தது பெரிய விடயமில்லை. தனியார் மருத்துவமனை 10 நாட்கள் மூடப்பட்டது. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது போலீஸ் புகார் கொடுத்து இருக்கின்றது. அவர்கள்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தவெக கட்சி கொடி நிறத்தில் இருந்த துணி
முன்னதாக கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்த மேஜையில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடி நிறத்தில் துணி இருந்ததால் அது அவசர அவசரமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்