Kallakurichi Liquor Deaths: சட்டப்பேரவையில் அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! முதல்வர் பதவி விலக கோரி அமளி!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக காவல்துறையினர் வெளியேற்றினர்.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கேள்வி நேரத்திற்கு முன்னர் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்றைய தினம் காலை 10 மணிக்கு கூடிய சட்டப் பேரவையில் மறைந்த எம்.எல்.ஏக்களுக்கும், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை கூடுகின்றது.
நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோ இதுவரை உயிரிழந்து உள்ளனர். 60க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண சம்பவங்களை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து உள்ளனர்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி
சட்டப்பேரவை தொடங்கிய உடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பேசினர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் குமார் உள்ளிட்டோர் 'Resign Stalin' என்ற பதாகையை காட்டி கோஷம் எழுப்பினர்.
இந்த அமளிகளுக்கு இடையே அவை முன்னவராக உள்ள அமைச்சர் துரைமுருகன் கேள்வி நேரம் முடிந்த பிறகு இது குறித்து விவாதிக்கலாம் என கூறிய நிலையில், தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக காவல்துறையினர் வெளியேற்றினர்.
பின்னர் பேசிய அவை முன்னவர் துரைமுருகன்ம் “கேள்வி நேரம் மிக முக்கியமானது, கேள்வி நேரத்தில் வேறு எதுவும் பேசக்கூடாது என்பது விதி, இது அனைத்தும் அவர்களுக்கு தெரியும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்து அவையை நடத்தியவர், அவர் இப்படி நடத்தியது ஆச்சரியமாக இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்து ’ஜீரோ ஹவரில்’தான் இந்த பிரச்னைகளை கிளப்ப வேண்டும்.
கள்ளச்சாராயம் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு, ஆனால் யாராக இருந்தாலும் விதிகளை மீறி பேச முடியாது. எல்லாம் தெரிந்தவர்கள் கேள் நேரத்திற்கு முன் விவாதம் கேட்பது தவறு, தவிர்க்க முடியாத காரணத்தால்தான் நீங்கள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர். ஆனால் வெளியில் செல்லும் முனைப்போடு நடந்து கொண்டு உள்ளனர்.” என கூறினார்.