Sivaji Krishnamurthy: ’நாய் வால…!’ சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மீண்டும் சிக்கல்! ஆக்ஷனில் இறங்கும் குஷ்பு!
Sivaji Krishnamurthy Vs Khushbu Sundar: தமிழிசை சவுந்தராஜனை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது தொடர்பாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த நிலையில் நடிகை குஷ்பு கண்டனம்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குத் தொடர உள்ளதாக மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்து உள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விழா மேடையில் தமிழிசை சவுந்தராஜனை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது தொடர்பாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வீடியோவை தனது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, ”நாய் வாலை நிமிர்த்த முடியாத ஒரு பழமொழி உண்டு. அது இந்த மனிதருக்கு பொருந்தும். பெண்களை மீண்டும் மீண்டும் அவதூறு செய்து வருகிறார். மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரை சஸ்பெண் செய்து உள்ளார். ஏனெனில் அவர்களுக்கு இடைவேளையில் அவர்களை மகிழ்விக்க இந்த வகையான நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, நான் அவருக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். மேலும் அவர் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதில் கடுமையான பாடம் கற்க வேண்டிய இடத்தில் அவர் இறங்குவதை உறுதி செய்வேன். மீண்டும் நான் சொல்கிறேன், அத்தகைய ஆண்கள் அவர்கள் பெற்ற வளர்ப்பை மட்டுமே காட்டுகிறார்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் பெண்களின் அவலத்தை காட்டுகிறார்கள்.
எங்க்ள் பாஜக குடும்பத்தில் மிகவும் மதிப்படும் உறுப்பினரான அக்கா தமிழிசை சவுந்தராஜனுக்கு ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கு உரிய மரியாதையை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
அறிவாலயத்தின் அலமாரியில் எலும்புக்கூடுகள் இடிந்து விழ ஆரம்பித்தால், அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று இந்த முட்டாள்களுக்குத் தெரியாது. பெண்களை அவதூறு செய்பவர்களாக திமுகவுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என தெரிவித்து உள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பு
விஜயவாடாவின் புறநகரில் உள்ள கேசரப்பள்ளியில் உள்ள கன்னவரம் விமான நிலையம் அருகே காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுடன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரின் மகன் நாரா லோகேஷ் மற்றும் 22 பேரும் பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழிசையை திட்டினாரா அமித்ஷா?
இந்த நிகழ்சியின் போது, மேடையில் அமர்ந்து இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தராஜன் வணக்கம் வைத்தார். அப்போது அவரை அழைத்து பேசும் அமித்ஷா, விரலை நீட்டியபடி பேசும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
நடந்தது என்ன? - தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் தமிழிசை சவுந்தராஜன் பதிவிட்டுள்ள பதிவில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன், 2024 தேர்தலுக்கு பிந்தைய களநிலவரம் குறித்தும், கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கேட்டதாகவும், நான் விவரித்துக் கொண்டிருந்தபோது, நேரமின்மையால் மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைத் தீவிரமாகச் செய்யுமாறு அறிவுரை கூறியது கூறியதாகவும் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எழும் தேவையற்ற யூகங்களை தெளிவுப்படுத்தவே இதை பதிவிடுவதாக தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த ட்வீட்டை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்டோரின் எக்ஸ் வலைத்தள கணக்குகளையும் டேக் செய்து உள்ளார்.