தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆளுநரை வெளியேற்ற நடப்பு தீர்மானம் நிறைவேற்றுக! விளாசும் வேல்முருகன் !

ஆளுநரை வெளியேற்ற நடப்பு தீர்மானம் நிறைவேற்றுக! விளாசும் வேல்முருகன் !

Kathiravan V HT Tamil
Apr 07, 2023 12:36 PM IST

ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாராமாகவே மாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவியிடம், இனி ஒரு போதும் நேர்மையை எதிர்பாக்க முடியாது.

ஆளுநர் ஆர்.என்.ரவி- வேல்முருகன்
ஆளுநர் ஆர்.என்.ரவி- வேல்முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

கார்ப்பரேட் வேதாந்தாவின் அடியாள் படையாக செயல்பட்டு காவல்துறை துப்பாக்கி குண்டுகள் பொழிந்தது. 15 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிப் போயினர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

6 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போது வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாளுக்கு காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை. மாறாக, தூத்துக்குடி மக்களின் சுவாசக் காற்றில் நஞ்சு கலந்த நாசகார ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு, ஒன்றிய அரசு முயன்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு நிதியில் பணம் பெற்று மக்களை தூண்டிவிட்டு அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

மக்களின் உணர்வுகளால் முன்னெடுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் கொச்சைப்படுத்தியதோடு, ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளையும் அவமானப்படுத்தி இருக்கிறார் ஆளுநர்.

ஆர்.என்.ரவியும் அவரின் தலைவர்களான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில், அவர்களை தேர்வெழுத ஊக்கப்படுத்தும் வகையில் பேசுவதை விடுத்து, தூத்துக்குடியின் மக்களையும், சுற்றுசூழலையும், வாழ்வுரிமைக்காகவும் போராடியவர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் ஆளுநர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

குடிமைத் தேர்வு எழுதி அதிகாரத்திற்கு வரும் மாணவர்களிடையே தவறான தகவலை கூறி, அம்மாணவர்களின் மனத்தில் நஞ்சை விதைத்து, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களையே, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியாகும். இது தான் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலின் எதிர்கால திட்டமாகும். அக்கும்பலின் திட்டத்தை தான், அவர்களின் அடியாளான ஆர்.என்.ரவி செய்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கொச்சைப்படுத்துவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் அடியாளான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டிய தேவை இப்போது இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, சூறையாடி ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல் வளர்ந்து வரும் அதே நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து, தமிழ்நாட்டு மக்களையும், தியாகிகளையும் இழிவுபடுத்தி வரும் ஆளுநர், தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பதற்கு அருகதையற்றவர்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருந்தால், அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை தான் நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என். ரவி அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் செயல்பாட்டில் ஆளுநரின் குறுக்கீடும், தடையும் அதிகரித்துள்ளன என்பதற்கு இதுவே சான்று.

அயோத்தி வழக்கில் இராமர் கோவிலுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பாராசரனுக்கு பாராட்டு விழா நடத்த, ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாராமாகவே மாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவியிடம், இனி ஒரு போதும் நேர்மையை எதிர்பாக்க முடியாது.

எனவே, ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான தீர்மானத்தை நடப்பு சட்டப்பேரவை கூட்டத்திலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

அதோடு, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய கொலைகாரர்களை கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது

IPL_Entry_Point

டாபிக்ஸ்