தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Army Soldier: ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி?

Army Soldier: ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி?

Karthikeyan S HT Tamil
Jul 04, 2023 10:01 AM IST

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் தாயிடம் செல்போனில் பேசியபடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர் மணித்துரை.
தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர் மணித்துரை.

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி - கனக வேலம்மாள் தம்பதியின் மகன் மணித்துரை (28). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மணித்துரைக்கு கடந்தாண்டு உதய ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

ஜம்மு-காஷ்மீரில் பணியில் இருந்த மணித்துரை கடந்த ஜூலை 1 ஆம் தேதி சொந்த ஊருக்கு வருவதாக இருந்த நிலையில் அன்று காஷ்மீரில் இருந்தபடியே கீழக்கரந்தையில் இருந்த தாயார் கனக வேலம்மாளை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் லட்ச கணக்கில் பணத்தை இழந்துவிட்டதாகவும், ஊரில் பலரிடமும் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வர விருப்பம் இல்லை என்றும் இனி நான் வாழ விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

நான் பேசும்போது இரண்டு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டால் நான் இறந்துவிட்டேன் என்று நினைத்துக்கொள். அதுவரை என்னிடம் பேசிக்கொண்டு இரு அம்மா என்று பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதன் பிறகு மணித்துரை பேசவில்லை. 

இதையடுத்து அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதுள்ளார். மணித்துரை பணியில் இருக்கும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது குறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ராணுவ வீரர் மணித்துரையின் உடல் நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் அந்தபகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்