தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023 Opening Ceremony,schedule,, Performers And Were To Watch

WPL 2023:பிரமாண்டமாக இன்று தொடங்கும் மகளிர் ஐபிஎல்!அணிகள்,போட்டிகள் முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 04, 2023 11:52 AM IST

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின்னர் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் மும்பையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. நவிமும்பையில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு பின்னர் முதல் போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இன்று தொடங்கும் மகளிர் ஐபிஎல் தொடர்
இன்று தொடங்கும் மகளிர் ஐபிஎல் தொடர்

ட்ரெண்டிங் செய்திகள்

அணிகள் மற்றும் கேப்டன்களின் விவரம்

மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், உத்தரபிரதேசம் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கேப்டன் பொறுப்பேற்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தானா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லேனிங், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், ஆஸ்திரேலியா நட்சத்திர வீராங்கனை பீத் மூனி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கும், ஆஸ்திரேலியா பேட்டர் அலிசா ஹீல் உத்தர பிரதேசம் வாரியர்ஸ் அணிக்கும் கேப்டனாக செயல்படவுள்ளார்கள்.

தொடர் நடைபெறும் முறை

ஐபிஎல் தொடரை போல் இந்த தொடரும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதுகின்றன. இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் மும்பையிலுள்ள பார்போர்ன், டிஒய் பாட்டீல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

மகளிர் ஐபிஎல் தொடக்க விழா நேரம், இடம்

முதல் முறையாக நடைபெற இருக்கும் மகளிர் ஐபிஎல் தொடரின் தொடக்க விழா இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, கிருதி சனோன் ஆகியோர் தொடக்க விழாவில் நடனமாட உள்ளார்கள். பிரபல ரேப்பர் ஏபி தில்லான், பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் மகளிர் ஐபிஎல் தொடருக்கான பாடலை பாடுகிறார்கள்.

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்பட பிசிசிஐ நிர்வாகிகள், விஐபிக்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் போட்டி குஜராத் ஜெயிண்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இறுதிப்போட்டி இதே டிஒய் பாட்டீல் மைதானத்தில் மார்ச் 26ஆம் தேதி நடைபெறுகிறது.

மகளிர் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மாலை 5.30 மணி முதல் பார்க்கலாம்.

இதற்கு முன்னதாக WT20 Challenge என்ற பெயரில் கடந்த 2018 முதல் 2022 வரை மூன்று அணிகள் மட்டுமே பங்கேற்க மகளிருக்கான டி20 தொடர் நடைபெற்றுது. மொத்தம் நான்கு போட்டிகள் மட்டுமே நடைபெறும் விதமாக குறுகிய தொடராக இது அமைந்திருந்தது. இதில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி அணி மூன்று முறையும், ஸ்மிருத்தி மந்தனா தலைமியான ட்ரையல் ப்ளேசர்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றன.

இதைத்தொடர்ந்து தற்போது மகளிர் ஐபிஎல் தொடர் 5 அணிகள் பங்கேற்க மிகவும் பிரமாண்டமாக மார்ச் 4 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்