தமிழ் செய்திகள்  /  Sports  /  Cwg 2022: 13 Medals Came For India On The 10th Day

CWG 2022: ஒரே நாளில் 13 பதக்கங்களை வசப்படுத்திய இந்தியா! முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 08, 2022 10:44 AM IST

காமன்வெல்த் போட்டிகளின் 10வது நாளில் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் தற்போது 55 பதக்கங்களை பெற்று தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.இந்தியாவுக்கு ஒரேயொரு தங்கம் கிடைத்தால் 4வது முன்னேறுவதற்கான வாயப்பு உருவாகியுள்ளது.

ஒரே நாளில் 13 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்
ஒரே நாளில் 13 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது 18 தங்கம்,15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்த,ம் 55 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா அணி பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட 7 பதக்கங்கள் குறைவாக 48 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தாலும், 19 தங்க பதக்கங்களை வென்றிருப்பதால் நியூசிலாந்து அணி 4வது இடத்தில் உள்ளது.

எனவே இன்னும் ஒரேயோரு தங்க பதக்கம் வென்றால் இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறிவிடும்.

இதற்கிடையே இந்தியாவுக்கு கிடைத்துள்ள 13 பதக்கங்களை வென்றவர்களின் முழுவிவரங்களை காணலாம்:

 

மகளிர் டி20 கிரிக்கெட் - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஹாக்கி - 16 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது.

மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் - ஆஸ்திரேலியாவின் சென் ஹ்சுவான்-யு வெண்டி மற்றும் க்ரோன்யா சோமர்வில்லே ஆகியோருக்கு எதிரான மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா இரட்டையர்கள் 21-15, 21-19 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றனர்.

ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு - நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் ஜியா ஹெங் டெக் என்பவரை 21-15, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.

டேபிள் டென்னிஸ் - கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் கமல், ஸ்ரீஜா அகுலா ஆகியோர் முதல் முறையாக இந்தப் பிரிவில் தங்கம் வென்றனர். மலேசியா ஜோடிகளான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஸ்குவாஷ் - கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிக பல்லிகல் - செளரவ் கோஷல் ஜோடி, 11-8, 11-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் லோபன் டோனா மற்றும் பில்லி கேமரூன் ஆகியோரை வீழ்த்தி வெண்கலம் வென்றனர்.

டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் - ஷரத் கமல் மற்றும் சத்யன் குணசேகரன் ஆகியோர் 11-4, 11-8, 8-11, 11-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ரிங்ஹால் மற்றும் லியாம் பிட்ச்ஃபோர்ட் ஆகியோரை வீழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றனர்.

குத்துசண்டை - இங்கிலாந்து வீராங்கனை டெமி ஜேட் என்பவரை வீழ்த்தி குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தில் பெற்று தந்தார் இந்தியாவின் நிது கங்காஸ். இவர் 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கம் வென்றார்.

குத்துசண்டை - பெண்கள் லைட் ப்ளை வெயிட் இறுதிப்போட்டியில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த கார்லி மெக்நௌல் என்பவரை இந்தயாவின் நிக்கெத் ஸரீன் வீழ்த்தி முதல் முறையாக காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்றார்.

குத்துசண்டை - இங்கிலாந்து வீரர் கிரண் மெக்டெனால்ட் என்பவரை வீழ்த்தி இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் இவர் பெறும் முதலாவது தங்கமாக அமைந்துள்ளது.

தடகளம் - ஆண்டகளுக்கான 10000 மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் 38:49:21 விநாடிகளில் இலக்கை எட்டி, வெண்கல பதக்கம் வென்றார்.

தடகளம் - ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த வெண்கல பதக்கத்தை வென்றார்.

தடகளம் - காமன்வெல்த் வரலாற்றில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களையும் இந்தியா அணி முதல் முறையாக வென்றுள்ளது. ட்ரிபிள் ஐம்ப் போட்டியில் எல்டோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்றுள்ளனர். இதன் மூலம் இரண்டு பதக்கங்களை இந்தியர்கள் தட்டி சென்றனர்.

WhatsApp channel