தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  தடகள போட்டித் தேர்வில் வென்றால் பயிற்சி – விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

தடகள போட்டித் தேர்வில் வென்றால் பயிற்சி – விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

Priyadarshini R HT Tamil
Apr 03, 2023 12:16 PM IST

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தடகள விளையாட்டில் வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி ஒசூரில் ஏப். 5ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகளப் பயிற்சிக்கான விளையாட்டு மையம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி மையத்தில் சேர்வதற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டி ஏப். 5ம் தேதி காலை 9 மணிக்கு ஒசூர் அந்திவாடி மினி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளர் வாயிலாக 6ம் தேதி முதல் தினசரி காலை 6 முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் தடகளப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர். மேலும், போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703487 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். எனவே, ஒசூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியில் உள்ள மற்றொரு வேலைவாய்ப்பு செய்தியை தெரிந்துகொள்வோமா….

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியிடங்கள் 

இந்திய உருக்கு ஆணையம் (செயில்) மூலம் ஆலோசகர், மருத்துவ அலுவலர், மேலாண்மை பயிற்சியாளர், உதவி மேலாளர், சர்வேயர், ஆபரேட்டர், சுரங்க போர் மேன், டெக்னீசியன், மைனிங் சர்தார் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 244 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியின் தன்மைக்கேற்ப 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக், எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படிப்புகள் கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆலோசகர் பணிக்கு 41 வயதும், மருத்துவ அலுவலர் பணிக்கு 34 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும், மற்ற பணிகளுக்கு 28 வயதும் வயது தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023. மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.sailcareers.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்