Pak vs Aus I செத்துப்போன பிட்ச்! மார்வெல் ஹீரோ தோர்-ஆக மாறிய கம்மின்ஸ்
எதற்கும் உதவாத செத்துப்போன பிட்சில் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறிய ஆஸி. பந்து வீச்சாளர்கள் நன்கு பிட்ச்சை மீதித்து பவுலிங் செய்யததால் குழிகள் விழுந்தது மட்டுமே மிச்சம். மற்றபடி மூன்று போட்டிகள் கொண்ட பாக். மற்றும் ஆஸி. இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவின்றி டிரா ஆகியுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லாகூர் நகரிலுள்ள காட்டிஃபி ஸ்டேடியத்தில் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 556/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. ஃபாலோ ஆன் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 97/2 என்ற நிலையில் டிக்ளேர் செய்து, பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
முதல் மூன்று நாள்கள் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ஆஸ்திரேலியா அணி. பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியின் திரும்பினாலும் கேப்டன் பாபர் ஆசாம் பொறுப்பாக ஆடினார். அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றும் விதமாக மிகவும் நிதானமாக விளையாடினார்.
இவரது நங்கூர ஆட்டத்தால் திக்குமுக்காடி போன ஆஸி. பந்து வீச்சாளர்கள், ஆசாம் விக்கெட்டை வீழ்த்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தோல்வியுற்றனர். குறிப்பாக பிட்ச் அவர்களுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்காமல் போனது. ஒரு கட்டத்தில் பந்து வீசி பிட்ச் பகுதியில் குழி விழுந்ததுதான் மிச்சமே தவிர விக்கெட் விழவில்லை.
ஆட்டத்தின் 53வது ஓவரில் ஆஸி. பந்துவீச்சாளர் கேமருன் கிரீன் வீசும்போது திடீரென பிட்டசில் குழி விழுந்த நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸ் அதை சரி செய்ய அம்பயர்களிடமிருந்து சுத்தியில் வாங்கி அந்தப் பகுதியில் ஓங்கி அடித்தார். பிட்ச் கண்காணிப்பாளர் வேலையை கேப்டனே நேரடியாக களமிறங்கி செய்தபோதிலும் எந்தப் பலனும் இல்லை.
மார்வெல் திரைப்படத்தின் சூப்பர் ஹீரோ தோர் கதாபாத்திரம் போன்று மாறி கம்மின்ஸ் செய்த இந்த வேலையை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 443/7 என்ற இன்னிங்ஸை முடிவு செய்தது. பொறுப்பாக ஆடி அணியை தோல்வியிலிருந்து மீட்ட கேப்டன் பாபர் ஆசாம் 196 ரன்கள் எடுத்து லயான் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவருடன் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் நிதானமாக விளையாடி 104 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை கடந்த டிரா செய்வதும் சுவரஸ்யமான விஷயமாகவே இருந்து வந்தது. குறிப்பாக வெற்றி பெற முடியாத என்றாலும் பேட்ஸ்மேன் நீண்ட நேரம் களத்தில் பேட் செய்து அணியை காப்பாற்றுவது, குறைவான இலக்கு இருந்தால் அட்டாக்கிங் பீல்டிங் செட் செய்து பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுவது என ஆட்டம் சூடாகவே இருக்கும்.
ஆனால் மிக நீண்ட நாள்களுக்கு பிறகு பாகிஸ்தானி மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டானது புத்துயிர் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் நிலையில், முதல் டெஸ்ட் நடைபெற்ற ராவில்பிண்டி மைதானத்தின் பிட்ச் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சாலை போன்ற பிளாட் பிட்சில் பவுலர்களுக்கு பந்து வீசுவது மட்டுமே வேலையாக இருந்தது. மற்றபடி பேட்மேனை குழப்பம் அடைய செய்யவோ, அச்சுறுத்துவதற்கான வாய்ப்பு கொஞ்சமும் அமையவில்லை. குறிப்பாக பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் 252 ரன்கள் எடுத்ததும், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்கான பேட்டிங் செய்யாமல் இருந்ததும் பிட்ச்சின் தன்மைக்கு சிறந்த உதாரணம்.
இதற்கு அடுத்தப்படியாக கராச்சியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பேட்மேன்களுக்காகவே தயார் செய்யப்பட்ட பிட்ச்சாகவே இருந்தது. இரண்டு மற்றும் மூன்றாவது நாளில் பவுலர்களுக்கு சற்று கைகொடுத்த போதிலும் அடுத்தடுத்து நாள்களில் பிட்ச் தன்மை பேட்ஸ்மேன்களுக்கே பெரிதும் உதவியது. 506 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தும் 171 ஓவர்கள் வீசி பாகிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியாமல் ஆஸி. பவுலர்கள் தவித்தனர்.
ஒரு புறம் ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி விளையாடினாலும், மறுபுறம் செத்துப்போன பிட்சில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஆஸி. பவுலர்கள் திணறி, இறுதியாக அவர்களால் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகள் முடிவுகளோடு அமைந்த நிலையில், அரிதாகவே டிரா போன்றவை நிகழ்ந்து வருகின்றன. போட்டி நடைபெறும் ஐந்து நாள்களில் பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் கைகொடுக்கும் விதமாக பிட்ச்கள் செட் செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டது போல் அமையும் செத்த பிட்ச்களால் டெஸ்ட் தொடர் விளையாடப்பட்டால் எந்த போட்டியிலும் முடிவு காண்பதென்பது முடியாத காரியமாகவே மாறிவிடும்.