LokSabha Speaker: சபாநாயகர் தேர்தல்! தெலுங்கு தேசம் கட்சிக்கு இந்தியா கூட்டணி ஆதரவா? சஞ்சய் ராவத் பகீர் பேட்டி!
18ஆவது மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் ஜூன் 24ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் கூடுகின்றது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால், எதிர்க்கட்சியாக உள்ள இந்தியா கூட்டணி ஆதரவு அளிக்க முயற்சி செய்யும் சென சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
கூட்டணி கட்சிகளை பாஜக உடைக்கும்
செய்தியாளர்களிடம் பேசிய ராவத், மக்களவை சபாநாயகர் தேர்தல் முக்கியமானதாக இருக்கும் என்றும், பாஜகவுக்கு பதவி கிடைத்தால், அது அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் அரசியல் கட்சிகளை உடைக்கும் என்றும் கூறினார்.
பாஜக தன்னை ஆதரிப்பவர்களுக்கும் துரோகம் செய்யும் கட்சி என்பதை எங்கள் அனுபவத்தில் கூறுகிறேன். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி தனது வேட்பாளரை நிறுத்த விரும்புவதாக நான் கேள்விப்படுகிறேன். அது நடந்தால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இது பற்றி ஆலோசிப்போம். மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிக்க முயற்சிப்போம் என கூறினார்.
விதிப்படி எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்க வேண்டும் என்ற சஞ்சய் ராவத், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையான ஆட்சி இல்லை என்று கூறினார்.
தவறுகளை திருத்த விரும்பினால் நல்லது
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத் தலைவர்கள் சிலரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து செய்தியாளர்களை கேட்ட கேள்விக்கு, கடந்த கால தவறுகளை ஆர்எஸ்எஸ் திருத்த விரும்பினால் நல்லது என்றார் ராவத்.
கடந்த ஜூன் 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், மக்களவையில் பாஜக தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் அல்ல என்றும் சஞ்சய் ராவத் கூறினார்.
நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல்
18ஆவது மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் ஜூன் 24ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் கூடுகின்றது. இந்த கூட்டத்தில், புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அதிக அனுபவமுள்ள எம்.பி., சபையின் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களவையின் முதல் சில அமர்வுகளுக்கு இடைக்கால சபாநாயகர் தலைமை தாங்குவார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் சபாநாயகர் பதவியை தங்களுக்கு அளிக்க வேண்டும் என கேட்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், பாஜக எம்.பியுமான புரந்தேஸ்வரியை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
“மக்களவை சபாநாயகர் பதவியை பாரதிய ஜனதா கட்சி தக்கவைத்துக் கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்பிக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும்” என ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் ஏற்கெனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.