NEET : நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும்.. இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு இதுதான் - அமைச்சர் அன்பில் மகேஷ்!
Minister Anbil Mahesh : நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை.நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர்.
நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம்
நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம்”என கூறினார்.
முன்னதாக, சென்னையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி ஒன்றில் நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்யில், “ இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 720க்கு 720 என்ற மதிப்பெண் பெற்றவர்கள் 67 பேர். இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 2021ஆம் ஆண்டு 3 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
நீட் விலக்கே நம் இலக்கு
2022ஆம் ஆண்டு ஒருவர், 2023ஆம் ஆண்டு விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் உள்ளிட்ட 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதனால் தான் தற்போது நீட் தேர்வின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 7 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும், தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதனால் தான் நீட் விலக்கே நம் இலக்கு என்று கூறிவருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.