தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress: காங்கிரசுக்கு அடுத்த தலைவலி.. ஓயாத சச்சின் Vs கெலாட் பஞ்சாயத்து!

Congress: காங்கிரசுக்கு அடுத்த தலைவலி.. ஓயாத சச்சின் Vs கெலாட் பஞ்சாயத்து!

Karthikeyan S HT Tamil
Apr 10, 2023 10:53 AM IST

Ashok Gehlot vs Sachin Pilot: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மீண்டும் திரும்பி இருப்பிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலை தலைதூக்க வைத்துள்ளது.

சச்சின் பைலட், அசோக் கெலாட்
சச்சின் பைலட், அசோக் கெலாட்

ட்ரெண்டிங் செய்திகள்

இருப்பினும் அடிக்கடி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்த நிலையில் கடந்த 2020 ஜூலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சி தலைமை நடத்தி சமரசத்தை அடுத்து சச்சின் சமாதானமடைந்தார். இருப்பினும் துணை முதல்வர், மாநில தலைவர் பதவிகளில் இருந்தும் விலகினார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசோக் கெலாட்டுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வந்தார் சச்சின். இதனால் காங்கிரசில் தொடர்ந்து குழப்பம் நிலவியது. எனினும் இருவருமே கட்சிக்கு முக்கியம் என கூறி அவர்களை அவ்வப்போது காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை (ஏப்.11) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் அறிவித்துள்ளார். இது சொந்த அரசுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் எதிரான போராட்டமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் நேற்று பேட்டி அளித்த சச்சின் பைலட் கூறுகையில், பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய அரசின் மீது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தினோம். தேர்தல் பிரசாரத்தின் போதும் பாஜகவின் ஊழலை விசாரிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அதனால்தான் நாங்கள் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தோம். ஆனால், ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளாவிட்டது. அடுத்த 6-7 மாதங்களில் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. பாஜக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

முந்தைய பாஜக அரசுக்கு எதிராக நாங்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக ஊழல் புகார்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சொந்த கட்சிக்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் திரும்பி இருப்பது காங்கிரஸ் கட்சி தலைமைக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்