தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு Kcr ஆதரவு!

Karnataka: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு KCR ஆதரவு!

Kathiravan V HT Tamil
Apr 22, 2023 11:15 AM IST

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் - கோப்புபடம்
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலம் முழுவதும் பாஜக- காங்கிரஸ் கட்சிகளிடையேதான் நேரடி போட்டி என்றாலும் பழைய மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வலுவாக உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 20 முதல் 30 தொகுதிகள் வரை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானாவை ஆளும் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமித் கட்சி, எச்.டி.குமாரசாமி தலைமையிலான மதசார்ப்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. தேசிய அரசியலில் கால்பதிக்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கான ராஷ்டிரிய சமிதி என்ற பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என கே.சந்திரசேகரராவ் மாற்றினார். இதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.

கர்நாடக தேர்தலில் போட்டியிட பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் எச்.டி.குமாரசாமி தனது நண்பர் என்பதாலும், தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு போதுமான நேரம் இல்லாததாலும், சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்ததாமல் மதசார்ப்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது.

இருப்பினும் தனது அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் காலூன்றுவதற்கு பிஆர்எஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிஆர்எஸ் கட்சித் தலைவரும்,தெலுங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் பகுதியில் இரண்டு பேரணிகளில் உரையாற்றியுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் 24 அன்று சத்ரபதி சம்பாஜி நகரில் (அவுரங்காபாத்) பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், ஜேடி(எஸ்) தலைவருமான எச்.டி.குமாரசாமி முன்னதாக ஐதராபாத்தில் டிஆர்எஸ் பெயரை பிஆர்எஸ் என மாற்றுவது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point