தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Indian Foods Vs Corona : கொரோனா உயிரிழிப்பை குறைக்க உதவிய இந்திய உணவுகள் - ஆராய்ச்சி கூறும் சுவாரஸ்ய தகவல்

Indian Foods vs Corona : கொரோனா உயிரிழிப்பை குறைக்க உதவிய இந்திய உணவுகள் - ஆராய்ச்சி கூறும் சுவாரஸ்ய தகவல்

Priyadarshini R HT Tamil
Apr 22, 2023 12:18 PM IST

Corona Death and Indian Foods : தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பை வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானாவை எதிர்த்து போராட உதவிய மஞ்சள், தேநீர்
கொரானாவை எதிர்த்து போராட உதவிய மஞ்சள், தேநீர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலைமையில் சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் ஆய்வறிக்கை ஐசிஎம்ஆர் மருத்துவ இதழில் அண்மையில் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை மிகவும் குறைவு. ஆனால் அந்த நாடுகளில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக இருந்தபோதிலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியர்களைவிட 20 மடங்கு அதிகமாக இறைச்சியை சாப்பிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பால் பொருட்கள், மீன், மதுபானம் ஆகியவற்றையும் இந்தியர்களைவிட அதிகமாக உட்கொள்கின்றனர்.

ஆனால் இந்தியர்கள், மேற்கத்திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய்கனிகளை சாப்பிடுகின்றனர். நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிக்கின்றனர். இந்தியர்கள் தொடர்ந்து தேநீர் அருந்துவதால், HDL (High density lipoprotein) அளவை அது அதிகப்படுத்துகிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் எனவும் அழைக்கப்படுகிறது. தேநீரில் உள்ள கேட்டசின்கள், ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடை குறைக்க உதவுகிறது.

2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்க்கின்றனர். தினசரி உணவில் மஞ்சளைப் பயன்படுத்துவதால், அது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைப்பதிலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தென்னிந்திய மக்கள் இட்லி, சாம்பாரையும், வட இந்திய மக்கள் ராஜ்மா அரிசி சாதத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இத்தகைய உணவு வகைகளால் இந்தியர்களின் ரத்தத்தில் இரும்பு, ஜிங்க் சத்து அதிகரிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இந்தியர்களின் உணவுப் பழக்க, வழக்கத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பை வெகுவாகக் குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்