INDIA bloc meeting: ’மோடியை வீழ்த்த வியூகம்’ வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India Bloc Meeting: ’மோடியை வீழ்த்த வியூகம்’ வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்!

INDIA bloc meeting: ’மோடியை வீழ்த்த வியூகம்’ வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்!

Kathiravan V HT Tamil
May 27, 2024 10:17 PM IST

ஜூன் 1ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

’மோடியை வீழ்த்த வியூகம்’ வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்
’மோடியை வீழ்த்த வியூகம்’ வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் (Hindustan Times)

கடைசி கட்ட வாக்குப்பதிவு 

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

வியூகங்களை வகுக்கும் எதிர்க்கட்சிகள்

ஜூன் 4ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய வியூகங்களை வகுக்க தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். 

அதன்படி பாஜகவை எதிர்க்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். 

மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு 

ஜூன் 1ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில்,  வாக்கு எண்ணிக்கையின் போது செய்ய வேண்டியவை, கூட்டணிக் கட்சிகளின் செயல்திறன்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

டெல்லி செல்லும் தலைவர்கள் 

இக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

சிறையில் சரணடைய உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்து உள்ள நிலையில், வரும் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரண் அடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

சிறையில் சரண் அடைவதற்கு முந்தைய நாள் நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

இந்தியா கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் கலந்து கொள்ளாது

ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்ளாது என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியா கூட்டணி கூட்டம் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 10 தொகுதிகளுக்கு தேர்தல் இருப்பதால் வர முடியாது என்று அவர்களிடம் கூறி உள்ளேன். பஞ்சாப், பீகார், உ.பி., ஆகிய மாநிலங்களுக்கும் ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  ஒரு பக்கம் புயல் பாதிப்பு, மறுபக்கம் தேர்தல் நடைபெறுவதால் புயல் நிவாரணம்தான் இப்போதைக்கு என் முன்னுரிமை" என கூறினார். 

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாம் கட்ட கூட்டமும், ஆகஸ்ட் 31 மற்றும் 1-ம் தேதிகளில் மூன்றாம் கட்ட கூட்டமும் நடந்தது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.