World Health Day 2024 : உலக சுகாதார தினம் 2024; ‘எனது சுகாதாரம்; எனது உரிமை’ - தலைப்பும், கள உண்மையும்! – ஓர் அலசல்!
World Health Day 2024 : அதை உறுதிபடுத்த அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை (குறிப்பாக கிராமப்புறங்களில், ஆரம்ப கட்ட சிகிச்சைக்கான (Primary Care) வசதிகளை உருவாக்க வேண்டும். தேவையான ஆட்களை பணியில் அமர்த்தி, தரமான சேவை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம். இந்தாண்டுக்கான தலைப்பு- "எனது சுகாதாரம்; எனது உரிமை".
ஐக்கிய நாடுகள் சபை, தனது சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் "தரம் வாய்ந்த சுகாதாரச் சேவை அனைவருக்கும் கிடைப்பது மனிதர்களுக்கான அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும்" எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஏழை மற்றும் பணக்காரர் என யார் இருந்தாலும் அவர்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைக்கச்செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என அது வலியுறுத்துகிறது.
அதை உறுதிபடுத்த அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை (குறிப்பாக கிராமப்புறங்களில், ஆரம்ப கட்ட சிகிச்சைக்கான (Primary Care) வசதிகளை உருவாக்க வேண்டும். தேவையான ஆட்களை பணியில் அமர்த்தி, தரமான சேவை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேவையான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ கல்வியை அனைத்து மக்களுக்கும் அளிக்க வேண்டும்.
சமச்சீர்தன்மையை சுகாதாரத்தில் உறுதிபடுத்த, சுகாதாரத்தை தீர்மானிக்கும் சமூகக் காரணிகளும் (சத்தான உணவு, சுத்தமான காற்று மற்றும் குடிநீர், வீடு போன்ற அடிப்படை வசதிகள், அனைவருக்கும் வேலை மற்றும் குறைந்தபட்ச ஊதியம்) அனைவருக்கும் (குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு) கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஆனால், கள உண்மை அனைவருக்கும் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை என்பது தனியாக இந்தியாவில் சட்டமாக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ செலவீனங்கள் காரணமாக 7 சதவீதம் மக்கள், இந்தியாவில் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றனர். ஏறக்குறைய 50 சதவீதம் மக்கள் தன் சொந்த செலவில் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடும் அவலம் தொடர்கிறது.
மருத்துவ செலவில் மருந்து மற்றும் மாத்திரைகளின் பங்கு 52 சதவீதம்.
சுகாதார செலவில் அரசின் பங்கு 2.9 சதவீதம் மட்டுமே. அந்த செலவில் மத்திய அரசின் பங்கு - 17.3 சதவீதம் மட்டுமே.
2025க்குள் சுகாதாரத்திற்கான GDP-2.5 சதவீதமாக உயர்த்த திட்டங்கள் இருந்தாலும், அந்த மதிப்பு 1.5 சதவீதம் GDPஐ தற்போது வரை தாண்டவில்லை.
சுகாதாரத்திற்கான நிதி மிகக் குறைவாக இருக்கும்போது அனைவருக்குமான சுகாதாரம் எப்படி சாத்தியம்.?
இந்தியாவில் 37.2 சதவீதம் மக்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு உள்ளது.
இந்தியாவில் 27 சதவீதம் மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் தான் 75 சதவீதம் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. 73 சதவீதம் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பது இன்னமும் எட்டாக் கனியாக உள்ளது.
"எனது சுகாதாரம்; எனது உரிமை" என்பது வெற்று முழக்கமாக இருக்கக்கூடாது.
மருந்தின் விலை மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளதா?
ஏப்ரல் 1, 2024ம் ஆண்டு முதல் மிகவும் தேவையான மருந்துகள் இந்தியாவில் (கிருமிக்கொல்லிகள், வலியை கட்டுப்படுத்தும் மாத்திரைகள், சர்க்கரை நோய் மருந்துகள்) விலையேற்றம் காண உள்ளது.
மருந்தின் விலை உயர்வை, மருந்து தயாரிக்க தேவைப்படும் இடுபொருள் செலவு (Input Cost) கூடாமல், கடந்த ஆண்டு விற்பனையான Wholesale Price Index அடிப்படையில் தீர்மானிப்பது சரியல்ல என நிபுணர்கள் கூற்றாக இருந்தும். அது இந்தியாவில் கடைப்பிடிக்கப்படாமல், அடிப்படை மருந்துகளின் விலையை ஏற்றுவது எப்படி சரியாகும்? அப்படியானால் மக்கள் நலன்?
ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு (Primary Care), 70 சதவீதம் பணம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதியாக இருக்க, கிராமப்புறங்களில் சாதாரண ஏழை மற்றும் எளிய மக்கள் பயனுறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு தேவையான திட்டங்களை மேற்கொள்ளவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர், IIT சென்னை செய்த ஆய்வில் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்தினால், (அவை அனைத்து நாட்களிலும் செயல்பட முடியும்) மக்கள் தங்கள் சொந்த செலவில் சுகாதாரச் சேவை பெறுவது குறைவதோடு, அரசிற்கும் சிகிச்சைக்கான செலவு குறைவதாக ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அரசு அதை நடைமுறைப்படுத்தாமல், மக்களைத் தேடி மருத்துவம் (மாதம் ஒரு நாள் மட்டுமே, அதுவும் வெறும் மாத்திரைகள் மட்டுமே கொடுப்பது, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோய்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டாலும் அவை மூன்றில் ஒருவருக்கு கூட கட்டுப்பாட்டில் இல்லை) திட்டத்தை மட்டுமே செயல்படுத்த முனைவது சரியா?
(தேர்தல் நேரத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில்,"நர்ஸ், டாக்டருங்கள வீட்டுக்கே அனுப்பி சிகிச்சை" எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. உண்மையில், பயிற்சி அளிக்கப்பட்ட பெண் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே வீட்டிற்குச் செல்கின்றனர்)
சுகாதாரத்தை மேம்படுத்த உணவு, நீர், காற்று மாசுபடுவதை தடுப்பதே சிறந்த வழியாக இருக்க, அதற்கான நடவடிக்கைகள் துளியும் மேற்கொள்ளப்படாமல், நாளுக்கு நாள் உணவு, நீர், காற்று மாசாவது அதிகமாகும் சூழலில், மக்களிடையே சுகாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும்?
சத்தான உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் காற்று அனைவருக்கும் வழங்குவது சட்டப்படி அரசின் கடமை மற்றும் மக்களின் அடிப்படை உரிமையாக இருக்க, அதில் துளியும் அரசு அக்கறை காட்டாமல் இருக்கும்போது "எனது சுகாதாரம்; எனது உரிமை" வெற்று வாசகமாகவே இருக்கும்.
மருத்துவர்களை, மருத்துவமனைகளை, பரிசோதனை வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை உறுதிபடுத்துவதற்குப் பதில், சத்தான உணவு, சுத்தமான காற்று மற்றும் குடிநீர் அனைவருக்கும் கிடைக்கச்செய்வது கூடுதல் பலன்களைத் தரும் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்தின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கும்போது, அரசு பொதுவெளியில் அதற்கான நடவடிக்கைகளை (மருந்தின் தரத்தை உறுதிசெய்வது) மேற்கொள்ளாமல் இருப்பது, "எனது சுகாதாரம்; எனது உரிமையை" கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அரசின் திட்டப்படியே (National Strategic Plan 2017-2025) காசநோயை சளி மாதிரி மூலம் உறுதிபடுத்துவது (இது துல்லியமான முடிவுகளைத் தராது) 2015ல் 9.1 மில்லின் பேரிலிருந்து 2023ல் 5.1 மில்லியன் பேருக்கு குறைக்கவும், துல்லியமான முடிவுகளை அளிக்கும் மூலக்கூறு பரிசோதனைகளை 2015ல் 40,000 பேரிலிருந்து, 2023ல் 14.7 மில்லியன் பேருக்கு உயர்த்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டும். 2023ல் 79 சதவீதம் பேருக்கு சளி மாதிரி மூலமும், வெறும் 21 சதவீதம் பேருக்கு மட்டும் மூலக்கூறு ஆய்வுகள் மூலம் காசநோயை உறுதிபடுத்தியிருப்பது எப்படி சரியாகும்? இப்படி செய்தால் 2025க்குள் காசநோயை அரசு, இலக்கு நிர்ணயித்தும், எப்படி ஒழிக்க முடியும்?
இப்படி இருந்தால் தனிநபரின் சுகாதார உரிமைகளை எப்படி உறுதிபடுத்தி காக்க முடியும்?
சுகாதாரத்தை காப்பதில் அரசிற்கே பெரும்பங்கு இருக்கும்போது, அந்த சட்ட ரீதியாலான கடமையை செய்ய அரசு தவறி, தனிநபர்கள் மீது "எனது சுகாதாரம்; எனது உரிமை" எனப் பேசச்செய்வது எப்படி சரியாக இருக்கும்?
National Medical Counsil புள்ளிவிவரப்படி,122 மருத்துவ மாணவர்கள் (64 இளம்கலை மருத்துவர்கள், 58 முதுகலை மருத்துவர்கள்) கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துள்ளனர். மருத்துவர்கள் மத்தியிலே மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வது நிகழும்போது, மருத்துவத்துறையின் குறைகள் வெளிச்சத்திற்கு வந்து தரமான மருத்துவ சேவை அவர்களுக்கே கிடைக்கவில்லை என்பது உறுதியாகிறது.
நோயைப்பற்றி அறிந்து கொள்வது நோயாளியின் உரிமை என்றாலும், அது பெரும்பாலான நேரங்களில் நடப்பதில்லை. சட்டங்கள் இருந்தும் நடைமுறையில் அது சாத்தியமில்லாமல் உள்ளது என்பதே கள உண்மை.
மக்கள் பங்களிப்பின்றி சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்தி மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வது கடினம் என்பதால், அதை உறுதிசெய்ய அரசுகள் முன்வர வேண்டும்.
சுருக்கமாக, தரமான மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் கிடைப்பதை,"எனது சுகாதாரம்; எனது உரிமை" என பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் நடைமுறைப்படுத்த அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்