தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Day Of Social Justice : உலக சமூக நீதி நாளும்; தமிழக பட்ஜெட்டும்! ஓர் அலசல்!

World Day of Social Justice : உலக சமூக நீதி நாளும்; தமிழக பட்ஜெட்டும்! ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 02:52 PM IST

World Day of Social Justice : உலக சமூக நீதி நாளும்; தமிழக பட்ஜெட்டும்! ஓர் அலசல்!

World Day of Social Justice : உலக சமூக நீதி நாளும்; தமிழக பட்ஜெட்டும்! ஓர் அலசல்!
World Day of Social Justice : உலக சமூக நீதி நாளும்; தமிழக பட்ஜெட்டும்! ஓர் அலசல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று உலக சமூகநீதி நாள் (பிப்ரவரி-20)

நேற்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சுகாதாரத்துறைக்கு, 20,198 கோடிகள் (2024-25) ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட (2023-24- 18,661 கோடிகள்) இந்தாண்டு இது 8 சதவீதம் அதிகம்.

333 கோடி சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும், கிராமப்புறங்களில் சாதாரண ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

குறிப்பாக நகர்ப்புற சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிதியோடு, கிராமப்புற நிதியை ஒப்பிட்டால் இதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு 243 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டிடங்கள் கட்டுவது, புதிய உபகரணங்கள் வாங்குவதை மட்டுமே அரசுகள் ஊக்குவிக்கின்றன. ஆனால் சாதாரண மக்களின் முதற்கட்ட சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், துணை சுகாதார நிலையங்களுக்கும் போதுமான நிதி நகர்ப்புற மையங்களுடன் ஒப்பிடும் போது ஒதுக்கப்படுவதில்லை.

கிராமங்களை புறக்கணிப்பது எப்படி சமூகநீதியாகும்?

செங்கல்பட்டு நந்திவரத்தில் 5,000 பேருக்கு மட்டும் ஒரு கிராம செவிலியர் இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்க 40,000-50,000 பேருக்கு ஒரு கிராம செவிலியர் இருந்து அவர்களின் வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது.

இதுவரை தமிழக அரசு கூடுதல் துணை சுகாதார நிலையங்களை அமைத்து கூடுதல் கிராம செவிலியர்களை பணியமர்த்தவில்லை.

புள்ளிவிவரங்கள் கூறும் நகர்ப்புற சுகாதார மையங்களுக்கான முன்னுரிமை

50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு – ராமேஸ்வரம், செந்துறை (அரியலூர்), ஸ்ரீபெரும்புதூர்,

அரக்கோணம் மற்றும் தேனி,சேலம் அரசு மருத்துவமனைகள் - 142 கோடி.

100 படுக்கைககள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு - அரசு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்க, ரூ.40 கோடி.

போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 அரசு மருத்துவமனைகளுக்கு (De-addiction Centres) ரூ.20 கோடி நிதிஒதுக்கீடு.

சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.64 கோடி.

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.53 கோடி.

ராயப்புரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.96 கோடி.

புறநகர் பெரியார் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.55 கோடி.

தடயவியல்துறைக்கு புதிய கருவிகள் மற்றும் கணினி வாங்க ரூ.26 கோடி.

இவை அனைத்தும் நகர்ப்புறம் சார்ந்தவை.

ஆனால் வெறும் கட்டிடங்கள் கட்ட 25 தாலுகா மற்றும் வட்டம்சாரா அரசு மருத்துமனைகளுக்கு மொத்தமே ரூ.87 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களின் மேம்பாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த நிதி போதுமான அல்லது தேவையான அளவு ஒதுக்கப்படவில்லை.

ஒரே ஒரு சென்னை அரசு பல் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.64 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 25 தாலுகா மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளின் வெறும் கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியோ 87 கோடி மட்டுமே.

கட்டிடங்கள் மட்டும் சிகிச்சையளிக்க உதவுமா?

போதிய ஆட்கள், போதிய பரிசோதனை வசதிகள், போதிய பணி நேரம், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் நகர்புறங்களைப் போன்று கிராமப்புறங்களில் இல்லை.

விபத்தின்போது சிகிச்சை அளிக்கும் மையங்கள் 694. அதில் 457 தனியார் மையங்கள், இவற்றில் எத்தனை மையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன? பெரும்பாலும் இல்லை அல்லது மிகச் சொற்பமே.

பட்ஜெட் சமூகநீதி அடிப்படையில் அமைந்துள்ளதாக ஆளுங்கட்சியினர் கூறினாலும், கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து, நிதி ஒதுக்கீடு போதிய அளவில் கிராமப்புற மருத்துவமனைகளுக்கு இல்லை அல்லது இருந்தாலும் கமிஷன் பெற உதவும் கட்டிடங்கள் கட்ட மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதே உண்மையான சமூகநீதி.

சமூகநீதி நாளிலாவது அரசு இதை உணர்ந்து, கிராமப்புற அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியும், பணியாட்காளையும், பரிசோதனை வசதிகளையும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

பின்தங்கிய மாவட்டங்களிலும், வளர்ச்சி குறைந்த பகுதிகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, வளர்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் அளித்து முடிந்த அளவு சமச்சீர் தன்மையை ஏற்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் மையங்கள் (MSME) உதவுவதை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையிலும், அதற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.1,557 கோடியும், தொழில் துறைக்கு ரூ.2,295 கோடியும் ஒதுக்கி, MSME க்கு போதிய நிதி ஒதுக்காததும் எப்படி சமூகநீதியாகும்?

சமூகநீதி நாளிலாவது இதைப்பற்றி தமிழக அரசு சிந்தித்து MSME துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்க முன்வருமா?

தமிழக தற்போதைய அரசு 2021ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 3,86,700 கோடி கடனாக பெற்றுள்ளது. பெற்ற கடனுக்கு வட்டியாக தமிழக அரசு 63,722 கோடியை செலுத்தி வருகிறது. நாளொன்றுக்கு தமிழக அரசு 175 கோடியை வட்டியாக மட்டும் செலுத்தி வருகிறது. இந்த வட்டியை 2 நாட்கள் கட்டாமல் மிச்சப்படுத்தினால், ஒரு மருத்துவக் கல்லூரியையே தமிழக அரசு கட்ட முடியும்.

உலக சமூக நீதி நாளில், சமூக நீதி கருதி இதையும் தமிழக அரசு கவனத்தில்கொள்ளுமா? சமூகநீதி நாளிலாவது சமூகநீதி காகிதத்தில் மட்டும் அல்லாமல் களத்திலும் வெளிப்பட்டால் நல்லதாக இருக்கும். தமிழக அரசு செவிசாய்க்குமா?

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்