Urad dal - Tomato Chutney : உளுந்து பொடி போட்டு செய்யும் தக்காளி சட்னி! வித்யாசமான சுவையில் அசத்தும் நெல்லை ஸ்பெஷல்!
Urad dal - Tomato Chutney : உளுந்து பொடி போட்டு செய்யும் தக்காளி சட்னி, வித்யாசமான சுவையில் அசத்தும் நெல்லை ஸ்பெஷல். டிபஃனுக்கு ஒரேமாதிரி சட்னி சாப்பிடும் போரிங்கான விஷயம் இனியில்லை.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி சட்னி என்றால் அது போரிங்கான ஒன்றுதான். அதற்குத்தான் திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து – தக்காளி சட்னி ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதும் எளிது. வழக்கமாக சட்னிக்கு தேவையான அனைத்தும் வதக்கி அரைக்கப்படும். இதில் உளுந்து பொடி செய்து சேர்க்கப்படுவதால் வித்யாசமான சுவையை உங்கள் சட்னிக்கு தரும். உளுந்து சேர்த்து செய்யப்படுவதால் இது ஆரோக்கியம் நிறைந்தது. இதில் வெங்காயம், தேங்காய் சேர்க்கக்கூடாது. அதனால் இந்தச் சட்னியை பயணத்தின்போது எடுத்துக்கொள்ளலாம். பயணித்திற்கு சிறந்தது. இந்த சட்னிக்கு நல்ல பழுத்த தக்காளியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். ஒரே ஒரு பெங்களூர் தக்காளி சேர்த்துக்கொண்டால் சுவை நன்றாக இருக்கும். உளுந்து – தக்காளி சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 3 (பழுத்தது – 2, பெங்களூர் தக்காளி – 1)
புளி – சிறிது
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – சிறிது
செய்முறை
தக்காளியை நன்றாக கழுவிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் உளுந்து சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். உளுந்து சிவந்து வரும்போது, அதில் சீரகம், வரமல்லி, வர மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவேண்டும். அதே கடாயில் எண்ணெய் சேர்தது சூடானவுடன், தக்காளி சேர்த்து கிளறவேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவேண்டும். தக்காளி நன்றாக வதங்கியவுடன், அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவேண்டும்.
ஏற்கனவே வறுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் மற்ற பொருட்களை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அது நன்றாக பொடியானவுடன், வதக்கி ஆறவைத்துள்ள தக்காளியை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். இதை அரைத்த சட்னியில் சேர்த்தால் சூப்பர் சுவையில் உளுந்து தக்காளி சட்னி தயார். இதை இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம், ஆப்பம், அடை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
சட்னி குறித்த சுவாரஸ்ய தகவல்
இந்தியாவில் சட்னிகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. தக்காளி, கடலை, தேங்காய், வெங்காயம், மல்லி, புதினா என பல்வேறு வகைகளில் சட்னிகள் தயாரிக்கப்படுகின்றன. சட்னி என்ற வார்த்தை இந்தியில் இருந்து வந்தது. சட்னா என்றால் இந்தியில் பசிக்கு புசி என்பதாகும். சட்னி என்றால், ஃபிரஷ்ஷாக அரைக்கப்படும் சட்னி அல்லது ஊறுகாய் இரண்டையும் குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஃபிரஷ்ஷாக அரைக்கப்படும் சட்னிக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் சட்னிகள் தொக்குகள் மற்றும் பச்சடிகளாக உள்ளன. இது சைட் டிஷ்களாக பரிமாறப்படுகிறது. இந்த சட்னிகள் இட்லி, இடியாப்பம், தோசை, பொங்கல், உப்புமா, ஊத்தப்பம், பெசரட்டு, சப்பாத்தி போன்ற டிஃபன்களுடன் பரிமாறப்படுகின்றன. வெங்காயம், தக்காளி, தேங்காயே முக்கிய உட்பொருட்களாக இருந்தபோதும், காய்கறிகள் மற்றும் காய்கறி தோல்களிலும் சட்னிகள் தயாரிக்கப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்