தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Suraikai Chettinadu Kuruma : சுடச்சுட சாதத்துக்கு ஏற்றது; சுரைக்காய் செட்டிநாடு வெள்ளை குருமா செய்வது எப்படி?

Suraikai Chettinadu Kuruma : சுடச்சுட சாதத்துக்கு ஏற்றது; சுரைக்காய் செட்டிநாடு வெள்ளை குருமா செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 12, 2023 12:00 PM IST

Suraikai Chettinadu Kuruma : வெள்ளை குருமாவாக வேண்டுமென்றால் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் என அனைத்தையும் தவிர்த்துவிட்டு, பச்சை மிளகாய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

சுரைக்காய் செட்டிநாடு வெள்ளை குருமா செய்வது எப்படி?
சுரைக்காய் செட்டிநாடு வெள்ளை குருமா செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

செட்டிநாடு வெள்ளை குருமா தென்னிந்தியாவில் பிரபலமான ஒன்று. இதில் பல வகைகள் உண்டு. இங்கு சுரைக்காய் செட்டிநாடு வெள்ளை குருமா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். சுடச்சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – கால் கிலோ

சீரகம் – கால் ஸ்பூன்

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

இஞ்சி – பூண்டு விழுது – அரை ஸ்பூன்

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

அல்லது

மிளகாய் தூள – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – கைப்பிடி

அரைக்க

தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் துருவியது

கசகசா – அரை ஸ்பூன்

செய்முறை

சுரைக்காயை தோல் சீவி நன்றாக கழுவி சிறு,சிறு துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மசித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் சுரைக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கப் தண்ணீர் அல்லது காய்கறிகள் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக மூடி வைத்து, சிம்மில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

இதற்கிடையில் தேங்காயையும், கசகசாவையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 4-5 முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். குருமா இன்னும் கொஞ்சம் திக்காக வரும். இது முற்றிலும் உங்கள் தேவையைப்பொறுத்துதான்.

தீயை குறைத்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து, மசாலா பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதித்த பின் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவேண்டும்.

இதை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என எதனுடன் வேண்டும்னாலும் பரிமாற சுவை அள்ளும்.

இதை பீர்க்கங்காய், சௌசௌ, பரங்கிக்காய், பூசணிக்காய் என எந்தக்காய் வைத்து வேண்டுமானாலும் செய்யலாம்.

வெள்ளை குருமாவாக வேண்டுமென்றால் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் என அனைத்தையும் தவிர்த்துவிட்டு, பச்சை மிளகாய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்