மழைக்கு இதமானது; இடித்து வைத்த நாட்டுக்கோழி ரசம்! குளிர் கால தொற்றுக்களில் இருந்து நிவாரணம்!
நாட்டுக்கோழி ரசம் அல்லது அசைவ ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
நாட்டுக்கோழியை இடித்து செய்யும் ரசம். இதை இந்த மழைக்காலத்தில் செய்து சாப்பிட்டீர்கள் என்றால், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் தெறித்து ஓடும். நாட்டுக்கோழி உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும். இந்த ரசம் அசைவ ரசம் என்று கூறுப்படுகிறது. நாட்டுக்கோழி பெரும்பாலும் சிலருக்கு பிடிக்காது. எனவே இதுபோல் ரசம் வைத்து சாப்பிட்டால் அதன் சாறு அதில் இறங்கியிருக்கும். இதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் முற்றிலும் உங்களுக்கு கிடைத்துவிடும். இந்த ரசத்தின் சுவை நன்றாக இருக்கும். சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் கூட ரசத்தை மட்டும் வடித்து சாப்பிடலாம். இது சாதாரண ரசம்போல்தான் இருக்கும். எனவே இந்த மழைக்கு இதமாக நாட்டுக்கோழி ரசத்தை வைத்து கட்டாயம் ருசித்து பாருங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்கத்தூண்டும் இந்த நாட்டுக்கோழி ரசத்தை ஒருமுறை ருசித்தால், அடிக்கடி செய்வீர்கள்.
தேவையான பொருட்கள்
வரமல்லி – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
(இந்த மூன்றையும் ஒரு கடாயில் சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்)
சின்ன வெங்காயம் – 15 பல் (இடித்தது)
பூண்டு – 10 பல் (இடித்தது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (இடித்தது)
நாட்டுக்கோழி – 100 கிராம் (இடித்தது)
(இடிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக சிறிய உரலில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
சீரகம் – கால் ஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து இடித்த சின்ன வெங்காய சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, இடித்த இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய், தக்காளி, மல்லித்தழை உப்பு சேர்த்து நன்றாக தக்காளி குழைந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வதக்கவேண்டும். அடுத்து இடித்த நாட்டுக்கோழி சேர்த்து நன்றாக வதக்கி அரை லிட்டர் தண்ணீர், இடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அரை லிட்டர் தண்ணீர் கால் லிட்டராக சுண்டும் வரை கொதிக்கவிட்டு, மேலும் சிறிது மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான நாட்டுக்கோழி ரசம் தயார்.
அடிக்கும் மழை மற்றும் குளிருக்கு இந்த ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளம். அதுமட்டுமின்றி வாய் முதல் வயிறு வரை இதமளிக்கும். இந்த மழைக்காலத்தில் மிஸ் செய்துவிடக்கூடாத ரசம் இந்த நாட்டுக்கோழி ரசம்.
இதை அப்படியே குக்கரிலும் வைத்துக்கொள்ளலாம். சிலர் கோழி வேகாது என்று நினைத்தால் குக்கரில் வைத்துவிட்டால் போதும். தேவையான அளவு விசில்கள் விட்டு இறக்கிக்கொள்ளவேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்