சூப்பர் சாஃப்ட்டான, பஞ்சு போன்ற கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சூப்பர் சாஃப்ட்டான, பஞ்சு போன்ற கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி பாருங்க!

சூப்பர் சாஃப்ட்டான, பஞ்சு போன்ற கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி பாருங்க!

Priyadarshini R HT Tamil
Dec 09, 2024 01:58 PM IST

கார்த்திகை மாத தீபத்திருவிழாவுக்கு தயாரகுங்கள். இதோ சாமிக்கு நைவேத்தியம் செய்ய அப்பம் செய்வது எப்படி என்று பாருங்கள்.

சூப்பர் சாஃப்பட்டான, பஞ்சு போன்ற கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி பாருங்க!
சூப்பர் சாஃப்பட்டான, பஞ்சு போன்ற கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி பாருங்க!

திருவண்ணாமலை

கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு இந்தப்பண்டிகையையொட்டி, கார்த்திகை மாத பிரமோற்சவம் நடைபெறும். இது 10 நாட்கள் நடைபெறும். உத்ராடம் நட்சத்திரத்தன்று கோயிலில் விழாக்கள் துவங்கும். கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதிகாலை 4 மணிக்கே இந்த தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்தன்று அல்லது முந்தைய நாள் பரணி நட்சத்திரம் வரும். அப்போது கோயிலுக்கு உள்ளே இந்த பரணி தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இதற்கான ஒளி பரணி தீபத்திடம் இருந்து பெறப்படும். திருவண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இது கார்த்திகை மகா தீபம் என்று அழைக்கப்படும். கொப்பரையில் எண்ணெய் ஊற்றி, கயிறுபோல் திரி திரித்து இந்த தீபம் ஏற்றப்படும். அதே நாளில் அதே நேரத்தில் வீடுகள் மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றப்படும். அப்போது தெய்வத்துக்கு நைவேத்தியமாக கார்த்திகை பொரி, அவல், சுண்டல், அப்பம் என படைத்து வீடுகளில் சுவாமி தரிசனம் நடைபெறும்.

கார்த்திகை தீப அப்பம் செய்வது எப்படி என்று பாருங்கள்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்

(அலசிவிட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும்)

வெல்லம் – முக்கால் கப்

(முக்கால் கப் வெல்லம் எடுத்து, அதே அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும். அதை அடுப்பில் வைத்து ஒரு கொதிவருமளவு காய்ச்ச வேண்டும். கம்பி பதம் தேவையில்லை. கொதி மட்டும் வந்தால் போதும்)

ஏலக்காய் – 3

வாழைப்பழம் – 1

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

ஊறவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்துவிட்டு, ஏலக்காய், துண்டாக்கிய வாழைப்பழம் மற்றும் காய்ச்சி ஆறவைத்த வெல்லப்பாகை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்காமல் தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும். அதை 15 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது நன்றாக கொதித்தவுடன், அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவேண்டும். அப்பம் நன்றாக மேலே எழும்பி, உப்பு வரவேண்டும். ஒருபுறம் வெந்தவுடன், அடுத்த புறத்தில் திருப்பிவிட்டு வேகவிடவேண்டும்.

இருபுறமும் ஒரேமாதிரி சிவந்து வரவேண்டும். அதற்கு எண்ணெயை கரண்டியில் எடுத்து அப்பத்தின் மேல் ஊற்றி, இருபுறமும் நன்றாக சிவந்தவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை எண்ணெய் வடிகட்டியில் வைத்து எண்ணெய் வடிந்தவுடன் எடுத்து சாப்பிட சூப்பர் சுவையுடன், நல்ல மிருதுவாகவும் இருக்கும்.

இதை இந்த கார்த்திகை பண்டிகையன்று கட்டாயம் செய்து சாப்பிடுங்கள். வீட்டில் பூஜையின்போது நைவேத்தியம் செய்தால், இறைவனின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த கார்த்திகை அப்பத்தை வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.