Ragi Tea : பசும் பால் அல்லது தண்ணீரில் தான் டீ குடித்திருப்பீர்கள், ராகியில் தேநீர் தயாரிக்கலாம் தெரியுமா? இதோ ரெசிபி!
Ragi Tea : பசும் பால் அல்லது தண்ணீரில் தான் டீ குடித்திருப்பீர்கள், ராகியில் தேநீர் தயாரிக்கலாம் தெரியுமா? ராகியை பால் பிழிந்து அதிலும் தேநீர் போடலாம்.
ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது. சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.
ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது. குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய நோய்களை தடுக்கிறது. அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த ராகியில் தேநீர் தயாரிக்கவும் முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு – அரைகப்
டீத்தூள் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை
ராகியை நன்றாக அலசிவிட்டு ஓரிரவு ஊறவைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்து அரைத்து பால் பிழிந்துகொள்ளவேண்டும். பாலை வடிகட்டும்போது வடிகட்டியில் மேலே வெள்ளைத்துணியைப் போட்டு வடிகட்டவேண்டும். அப்போதுதான் நன்றாக பால் மட்டும் வரும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் டீத்தூள் சேர்க்கவேண்டும். அடுத்து தட்டிய இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகிய அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி டீ டிகாஷன் தயாரித்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் பிழிந்து வைத்துள்ள பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அந்தப்பால் நன்றாக சூடானவுடன், அதில் தயாரித்து வைத்துள்ள டிகாஷனைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து பருகினால், சூப்பர் சுவையில் ராகி பால் தேநீர் தயார். இது வித்யாசமான சுவையில் இருக்கும். நீங்கள் பால் இல்லாவிட்டால் கூட இந்த டீயை ஈசியாக தயாரித்துவிடலாம்.
இப்போது வரும் பாக்கெட் பால் எதுவும் உடலுக்கு நன்மையைத் தருவதில்லை. எனவே, இந்த ராகி பால் உங்கள் உடலுக்கு கட்டாயம் நன்மையைத்தருகிறது. எனவே பருகி பலன்பெறுங்கள்.
டாபிக்ஸ்