தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mixed Veg Chutney: ஒரு கப் காய்கறி இருந்தா போதும் 5 நிமிஷத்துல கதம்ப சட்னி ரெடி!

Mixed Veg Chutney: ஒரு கப் காய்கறி இருந்தா போதும் 5 நிமிஷத்துல கதம்ப சட்னி ரெடி!

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 10:37 AM IST

ஒரு கப் காய்கறி இருந்தால் 5 நிமிடங்களில் கதம்ப சட்னி செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

கதம்ப சட்னி
கதம்ப சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

கதம்ப சட்னி செய்வதற்கு வீட்டில் உள்ள எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் கலவையாக ஒரு கப் எடுத்துக் கொள்ளலாம். ஃபிரிட்ஜில் மீதமுள்ள காய்கறிகளிகளை பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். முட்டைக்கோஸ், சுரைக்காய், குடமிளகாய், மஞ்சள் பூசணி, முள்ளங்கி, காலிஃபிளவர், சௌசௌ, பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

என்ன தான் சட்னி புதுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தாலும், வேலையும் சீக்கிரம் முடிய வேண்டும் இல்லையா? காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்து விட்டால் போதும், 5 நிமிடத்தில் இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் ஆன சட்னி செய்திடலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

கதம்பச் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1 நறுக்கியது

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் 2-3

தேங்காய் துருவல் - ¼ கப்

சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

கடுகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2-3

பெருங்காயம் ¼ டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கதம்பச் சட்னி செய்முறை

முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாற வேண்டிய அவசியம் இல்லை, லேசாக வதங்கினால் போதுமானது.

இதனுடன் நறுக்கி வைத்துள்ள ஒரு கப் காய்கறி கலவையை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கடாயை மூடி வேக வைக்கவும்.

காய்கறிகள் வெந்த பிறகு இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சூடு தணிந்த பின், வதக்கிய காய்கறிகளை மிக்ஸி ஜாரில் மாற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது தாளிப்பதற்கு நல்லெண்ணையை சூடாக்கி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். தாளிப்பை சட்னியில் சேர்த்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.

இதை கட்டியாக அரைத்து சாதத்துக்கு தொட்டுக்கொள்ள துவையலாகவும் பரிமாறலாம்.

இந்த ஆரோக்கியமான கதம்ப சட்னியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்