Puran Poli : விநாயகர் சதுர்த்துக்கு வட இந்தியாவில் செய்யப்படும் பூரண் போலி எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
Puran Poli : விநாயகர் சதுர்த்துக்கு வட இந்தியாவில் செய்யப்படும் பூரண் போலி எப்படி செய்வது என்று பார்க்கலாமா? விநாயகர் சதுர்த்தியை வித்யாசமாகக் கொண்டாடுங்கள்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி அல்லது கணேஷ் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை விநாயகருக்கு கொண்டாடப்படுகிறது. விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை களைபவராகக் கருதப்படுகிறார். செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்படும். வீதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவை சதுர்த்தி முடிந்து 3ம் நாள் அல்லது 5ம் நாள் விமரிசையாக ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பக்தர்கள் இவற்றை வெகுவிமரிசையாக செய்து மகிழ்வார்கள் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை. விநாயகருக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு சிறப்பு உணவுகள் விநாயகருக்காக செய்யப்படுகிறது. அதில் புரான் போலியும் ஒன்று. வழக்கமான கொழுக்கட்டைகளுக்கு மத்தியில் இந்த புரான் போலியையும் இந்தாண்டு செய்து, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழுங்கள். இது தீபாவளியன்றும் மஹாராஷ்ட்ராவில் செய்யப்படும் ஒன்றாகும். பூரண் போலி என்பது வேறு ஒன்றுமல்ல, பூரணத்தை உள்ளே வைத்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்புதான். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பூரண் போலி செயய் தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு கப்
சர்க்கரை அல்லது வெல்லம் – அரை கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஜாதிக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து உருட்டி நெய்விட்டு தடவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்துவிடவேண்டும்.
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக மசியும் அளவுக்கு அதை வேகவிடவேண்டும்.
தண்ணீரை வடித்துவிட்டு, நன்றாக மசித்துகொண்டு அதில் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசையவேண்டும்.
பின்னர் அதில் சிட்டிகை உப்பு, ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி, அதை சப்பாத்தி கட்டை அல்லது கைகளால் தேய்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த கடலை பருப்பு கலவையை சிறு உருண்டையாக உருட்டி, அதன் நடுவில் வைத்து, அந்த மாவை மூடி கைகளால் அல்லது சப்பாத்தி கட்டையில் வைத்து பூரணம் வெளியே வந்துவிடாமல் தேய்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை தோசைக்கல்லில் சேர்த்து இருபுறமும் நெய்விட்டு சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சூவையில் பூரண் போலி தயார். இதை வைத்து விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்க படைக்கலாம். இந்த ரெசிபியையும் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்