ஆனியன் உருளை மட்டன் குழம்பு; உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
ஆனியன் உருளை மட்டன் குழம்பை உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
செய்முறை
அரை மூடித் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக்கொள்ளவேண்டும். 2 பெரிய வெங்காயத்தை, தயிர் வெங்காயத்தில் போடுவதுபோல நீளமாக நறுக்கி வைக்கவேண்டும். 2 பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவேண்டும். 2 பெரிய தக்காளிகளையும், மீண்டும் ஒரு பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். 2 உருளைக்கிழங்குகளை தோல் சீவி மீடியம் சைஸில் நறுக்கி, நீரில் போட்டு வைக்கவேண்டும். அரை கிலோ மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு 2 கப் நீர் ஊற்றி ஒரு குக்கரில் போட்டு 4 விசில்கள் வரும் வரை வேகவிட்டு கறியை தனியாகவும், வேகவைத்த நீரை தனியாகவும் வைக்கவேண்டும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அது சூடான பின் கசகசா மற்றும் சோம்பு சேர்த்து தலா அரை ஸ்பூன், முந்திரிகள் 12, போட்டு நன்றாக வறுத்து பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு ஓரளவு அது நிறம் மாறும் வரை வதக்கி தேங்காய் துருவலை சேர்த்து, சில நொடிகள் நன்றாகக் கிளறிக்கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
மசாலா அரைப்பது எப்படி?
இதை ஆறவிட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில் குழம்பு வைக்கும் பாத்திரத்தை வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது சூடானவுடன், ஒரு அன்னாசிப்பூ, கிராம்பு 3, ஏலக்காய் 1, பட்டை 1, பிரிஞ்சி இலை 1 சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அது லேசான பிரவுனாகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.
பின்னர், அதில் நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து தக்காளியை குழைய வதக்கவேண்டும். தக்காளி குழைந்ததும் மட்டனை சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறி, அரைத்த வெங்காய பேஸ்ட்டும், இதில் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவேண்டும். பின்னர் மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன், மல்லித்தூள் 2 ஸ்பூன், கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
குழம்புவைக்கும் முறை
இதை நன்றாகக் கிளறி, மட்டன் வேகவைத்த நீரை இதில் சேர்க்கவேண்டும். (உங்களுக்கு குழம்பு அதிகம் தேவையெனில், இதனுடன் கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும்) இப்போது உருளைக்கிழங்கை இதில் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு மூடியால் இதை மூடி அடுப்பை மிதமாக எரியவிட்டு 10 நிமிடங்கள் வேகவிடவேண்டும். கறி ஏற்கனவே வெந்திருப்பதால் 10 நிமிடங்கள் வெந்தாலே போதுமானது.
10 நிமிடங்களுக்கு பின்னர், மூடியைத் திறந்து குழம்பை ஒருமுறை நன்றாகக் கலக்கிவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு மல்லித் தழைகள் தூவவேண்டும். மிக மிக ருசியான ஆனியன் உருளை மட்டன் குழம்பு தயார். இந்தக் குழம்பை நீங்கள் தீபாவளிக்கும் செய்யலாம் அல்லது எந்த நாளில் செய்து சாப்பிட்டாலும், அன்றைய நாள் தீபாவளிதான்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். தீபாவளியையொட்டி, எண்ணற்ற பலகார ரெசிபிக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். இனிய, பாதுகாப்பான, ஆரோக்கியமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்