மகிழ்ச்சி மட்டுமல்ல; ஆரோக்கியத்தையும் கொண்டுவரும் தீபாவளி! இந்த மல்டி மில்லட் லட்டு முயற்சி செய்யுங்கள்!
மகிழ்ச்சி மட்டுமல்ல; ஆரோக்கியத்தையும் கொண்டுவரும் தீபாவளிக்கு இந்த மல்டி மில்லட் லட்டு முயற்சி செய்து பாருங்களேன்.
தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா? புத்தாடை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சா? இனி என்ன பலகாரம் செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? புதிதாக என்ன செய்யலாம்? வித்யாசமாக என்ன செய்யலாம்? ஆரோக்கியமாக என்ன செய்யலாம்? அத்தனை யூடியூப் சானல்கள், ரீல்ஸ்களிலும், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று எண்ணற்ற ரெசிபிக்கள் கொட்டிக்கிடக்கிறது. இத்தனைக்கும் மத்தியில்தான் என்ன செய்யலாம் என்று குழம்பியிருக்கிறீர்களா? இதோ இந்த தீபாவளிக்கு செய்து அசத்த மல்டி மில்லட் லட்டு. சூப்பர் சுவையானது. குறிப்பாக அதிக ஆரோக்கியமானது. பிபி, சர்க்கரை உள்ளவர்கள் முதல் பல்வேறு வியாதிகளில் உழல்பவர்களும் பயந்துகொண்டே தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவார்கள். ஆனால் இதை சாப்பிடும்போது எந்த பயமும் வேண்டாம். இந்த மல்டி மில்லட் லட்டு எண்ணற்ற ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஒன்று ஆகும். இதற்கு நாம் சாமை, குதிரைவாலி, வரகு, திணை, ராகி, கோதுமை, சிவப்பரிசி, கம்பு என அனைத்து மில்லட் வகைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தி நாம் செய்யப்போகிறோம் என ஸ்வேதா நரேஷ் குமார் கூறுகிறார். திருச்சியைச் சேர்ந்த செஃப் ஸ்வேதா மில்லட் உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதன் அவசியம் குறித்தும் கூறி வருகிறார். இந்த தீபாவளிக்கு மல்டி மில்லட் லட்டு எப்படி செய்வது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வரகு – கால் கப்
சாமை – கால் கப்
திணை – கால் கப்
குதிரைவாலி – கால் கப்
ராகி – கால் கப்
கம்பு – கால் கப்
சிவப்பரிசி – கால் கப்
கோதுமை – கால் கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி – ஒரு கப் (பொடித்தது)
பாதாம் – ஒரு கப் (பொடித்தது)
திராட்சை – ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி – சிட்டிகை
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது சர்க்கரை
செய்முறை
வரகு, திணை, சாமை, குதிரைவாலி, ராகி, கம்பு, சிவப்பரிசி. கோதுமை ஆகிய அனைத்தையும் தனித்தனியான வறுத்து, ஆறவைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இவையனைத்தையும் சமஅளவு எடுக்கவேண்டும். நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம். இந்த மல்டி மில்லட் மாவை நீங்கள் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இது 6 மாதம் வரை கெடாது. இதில் புட்டு, இடியாப்பம், தோசை என செய்து அசத்தலாம். உங்களுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிட தோன்றினால் லட்டுகளாகப் பிடித்துக்கொள்ளலாம்.
இதில் ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் அளவு வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, இந்த மாவை நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல நெய்விட்டு மணம் வரும் வரை மாவை வறுக்கவேண்டும்.
அடுத்து அதில் வெல்லம் அல்லது இனிப்புக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளதை சேர்த்துக்கொள்ளவேண்டும். அது நன்றாக உருகிவரும்.
ஒரு கடாயில் எடுத்து வைத்துள்ள நட்ஸ்களை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இவற்றை அந்த மாவில் சேர்த்து கிளறிவிட்டு, இறக்கவேண்டும்.
நெய்யை உருக்கி அருகில் வைத்துக்கொண்டு, இளஞ்சூட்டிலே லட்டுக்களாக பிடிக்கத்துவங்கவேண்டும். தேவைப்படும்போது நெய் சேர்த்துக்கொள்ளலாம். இந்த லட்டு சூப்பர் சுவையானதாக இருக்கும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் கட்டாயம் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
இந்த தீபாவளிக்கு இதை கட்டாயம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுபோன்ற சிறு தானியங்களை உண்ணமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளும் லட்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்