கார்த்திகை பொரி உருண்டை; திருவண்ணாமலை தீபத்திருநாளில் செய்து சாப்பிடுங்கள்! இதோ ரெசிபி!
கார்த்திகை பொரி உருண்டை செய்வது எப்படி என்று பாருங்கள்.
கார்த்திகை தீபம் தமிழ் பேசும் இந்துக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். தமழ் காலாண்டரை அடிப்படையாக வைத்து, கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாளன்று இந்தப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் பவுர்ணமியும் வருவது இந்த நாளில் சிறப்பு. ஆன்மீக ரீதியாக இந்த நாள் கொண்டாட சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் ரீதியான காரணமாக கார்த்திகை, மார்கழி என்பதெல்லாம் தமிழகத்தில் கடும் குளிர் வீசக்கூடிய மாதங்கள். அந்த மாதத்தில் விளக்கேற்றுவது வளிமண்டலத்தை இதமாக்க உதவும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை நாளன்று அனைவரது வீடுகளிலும் வரிசையாக விளக்கேற்றுவது வழக்கம். கர்த்திகை தீபத்தன்று அல்லது அடுத்தடுத்த நாட்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகள் அனைத்து கோயில்களிலும் நடக்கும். பனை ஓலைகளை சேகரித்து குடிசை வேய்ந்து கொளுத்துவார்கள். கார்த்திகை மாதத்தின் குளிர் குறையும்.
திருவண்ணாமலை
கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு இந்தப்பண்டிகையையொட்டி, கார்த்திகை மாத பிரமோற்சவம் நடைபெறும். இது 10 நாட்கள் நடைபெறும். உத்ராடம் நட்சத்திரத்தன்று கோயிலில் விழாக்கள் துவங்கும். கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதிகாலை 4 மணிக்கே இந்த தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்தன்று அல்லது முந்தைய நாள் பரணி நட்சத்திரம் வரும். அப்போது கோயிலுக்கு உள்ளே இந்த பரணி தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இதற்கான ஒளி பரணி தீபத்திடம் இருந்து பெறப்படும். திருவண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இது கார்த்திகை மகா தீபம் என்று அழைக்கப்படும். கொப்பரையில் எண்ணெய் ஊற்றி, கயிறுபோல் திரி திரித்து இந்த தீபம் ஏற்றப்படும். அதே நாளில் அதே நேரத்தில் வீடுகள் மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றப்படும். அப்போது தெய்வத்துக்கு நைவேத்தியமாக கார்த்திகை பொரி, அவல், சுண்டல், அப்பம் என படைத்து வீடுகளில் சுவாமி தரிசனம் நடைபெறும்.
கார்த்திகை பொரி உருண்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
அவல் பொரி – 4 கப்
(கடைகளில் அவல் பொரி அல்லது கார்த்திகை பொரி என்று கேட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். வழக்கமான பொரியைப் போல் இருக்காது இந்த கார்த்திகைப் பொரி. எனவே பார்த்து வாங்கிக்கொள்ளவேண்டும்)
வெல்லம் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை
தேங்காய் பல் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் நெய்யில் தேங்காய் பற்களை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி தூசிகளை நீக்கிவிடவேண்டும். அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை சேர்த்து நல்ல பாகுபதம் வரும் வரை கிளறவேண்டும். பாகுபதம் என்பது தண்ணீரில் வெல்லத்தை சேர்த்தால் அது அப்படியே ஓரிடத்தில் கெட்டியாக நிற்கவேண்டும். ஓடக்கூடாது. அதுதான் பாகுப்பதம் என்பது.
பாகுப்பதம் வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும். அப்போதுதான் வெல்லம் அதிகம் கெட்டிப்படாமல் இருக்கும். அதில் சுக்குப்பொடி, ஏலக்காய்ப்பொடி சேர்த்துகிளறவேண்டும். அடுத்து கார்த்திகை பொரியை மற்றும் நெய்யில் வறுத்து வைத்துள்ள தேங்காய் பற்களை சேர்த்து கிளற வேண்டும்.
இதை சூடு பொறுக்கும் பதத்தில் எடுத்து பொரி உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக நெய் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். இந்த பொரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த கார்த்திகைக்கு இந்த பொரி உருண்டையை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்