இந்த ஒரு கறி மசாலா மட்டும் போதும்! உங்கள் வீட்டு வறுவல், பொரியல், கிரேவி என அனைத்தும் ருசிக்கும்!
கறி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று பாருங்கள்.
இந்த ஒரு கறி மசாலா மட்டும் அரைத்து வைத்துக்கொண்டால் போதும். உங்கள் வீட்டில் வைக்கப்படும் அசைவம் மற்றும் சைவம் என எந்த கிரேவி, வறுவல் மற்றும் பொரியலுக்கும் போதுமானது. இதை வைத்து நீங்கள் செய்யும் அனைத்தும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். இதை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெடவேண்டும். ஆனால் ஒருமுறை செய்து வைத்துக்கொண்டால், மாதக்கணக்கில் கவலைகொள்ளத்தேவையில்லை. நீங்கள் தினமும் என்ன பொரியல், வறுவல், கூட்டு, அவியல் செய்யலாம் என குழம்ப வேண்டாம் எதைச் செய்தாலும் இந்தப்பொடியை சேர்த்து செய்துகொள்ளுங்கள். ருசியும், மணமும் அபாரமாக இருக்கும். எனவே நீங்கள கவலைகொள்ளதேவையில்லை இந்தப்பொடி இருந்தால்போதும். இந்தப்பொடியை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தரமானதாக வாங்கிகொள்ளவேண்டும். அப்போதுதான் கறி மசாலா சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒரு கிலோ
மிளகாய் – அரை கிலோ
கறிவேப்பிலை – 2 கைப்பிடியளவு
மிளகு – 100 கிராம்
சோம்பு – 100 கிராம்
சீரகம் – 200 கிராம்
பட்டை – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
கல் உப்பு – 2 ஸ்பூன்
கிராம்பு – 20 கிராம்
அன்னாசிப் பூ – 20 கிராம்
கசகசா – 20 கிராம்
அனைத்தையும் நனறாக சுத்தம் செய்து வெயிலில் அரைமணி நேரம் உலர்த்தி எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் எந்தவொரு பொடி ரெசிபியையும் நீங்கள் மழைக்காலத்தில் செய்யக்கூடாது. வெயில் காலத்தில் மட்டும்தான் செய்யவேண்டும்.
அப்போதுதான் வெயிலில் உலர்த்த வசதியாக இருக்கும். மேலும் நாம் வறுத்து அரைக்கும் பொருட்கள்தான் என்றாலும், அவற்றை தூசி நீக்கி நல்ல வெயிலில் முதலில் உலர்த்திக்கொள்வது தான் நல்லது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் அதிகம் ஆண்டுக்கு செய்வதாக இருந்தால் எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் மாதத்துக்கு செய்கிறீர்கள் என்றால் இந்த ரேஃசியோவில் ஒவ்வொரு பொருளின் அளவையும் அப்படியே குறைத்துக்கொள்ளவேண்டும்.
செய்முறை
கடாயை சூடாக்கி மல்லி மற்றும் மிளகாயை தனித்தனியாக ட்ரையாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நல்ல மொறுமொறுவென வரவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, மிளகு, சீரகம், சோம்பு அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவேண்டும். இவையெல்லாம் அதிகம் சிவக்கத் தேவையில்லை ஓரளவு வறுபட்டாலே போதும்.
அடுத்து பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வறுக்கவேண்டும். அதை சூடாக்கிக்கொண்டால் போதுமானது. அதிகம் வறுபட்டால், அது கசந்துவிடும். அடுத்து மஞ்சளை தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
உப்பையும் வறுத்துக்கொள்ளவேண்டும். கசகசாவை தனியாக வறுக்கக்கூடாது. ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். தனியாக வறுத்தால் அது கரிந்துவிடும். அனைத்தையும் வறுத்து நன்றாக ஆறவைத்துவிடவேண்டும். இதை மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த பொடியை நன்றாக ஆறவைத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துககொள்ளவேண்டும். இது கறிமசாலாப்பொடி, எந்த கிரேவி, எந்த வறுவல், பொரியல் என எதனுடனும் சேர்த்துக்கொள்ளலாம். அசைவம் மற்றும் சைவம் என எந்த பொரியல், வறுவல் மற்றும் கிரேவிக்கும் ஏற்றது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்