Home Made Hair Dye : இளநரை, முதுநரை இரண்டையும் போக்கும் இயற்கை ஹேர் டை! வீட்டிலே செய்யலாம் ஈசியா!
Home Made Hair dye : நீலி பிருங்காடி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்காது. ஆனால் தலைமுடியின் வேர்கால்களை குளிர்ச்சியாக்கி, ஊட்டத்தை கொடுக்கும். முடியை கருமை நிறமாக மாற்றும்.
இயற்கையான முறையில் வீட்டிலே ஹேர் டை தயாரிப்பது எப்படி?
இன்று நரைமுடியை மறைப்பதற்கு நாம் பல்வேறு செயற்கை ஹேர்டைகளை பயன்படுத்துகிறோம். அதனால் எண்ணற்ற பக்கவிளைவுகள் ஏற்படும். அதுவே தலைமுடி உதிர்வுக்கும், தலைமுடி அதிகம் நரைக்கவும் காரணமாகிறது. இதனால் புற்றுநோய் முதல் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே அவற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதை தவிர்க்க வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கக்கூடிய ஹேர் டை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நீலி பிருங்காடி தைலம்
(இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நீலி என்றால் அவுரி, பிருங்காதி என்பது கரிசலாங்கண்ணி இலைகள் ஆகும். அவுரிப்பொடி மற்றும் கரிசலாங்கண்ணிப்பொடியுடன் தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்ற சில மூலிகைகளும் சேர்த்து உருவாக்கப்பட்ட எண்ணெய்தான் இந்த நீலிபிருங்காடி தைலம். சிவப்பு வண்ணத்தில் திக்காக இருக்கும்.
இந்த தைலத்தை இளநரை, முடிஉதிர்வு, பொடுகு உள்ளவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம். முடி உதிர்வு அதிகம் ஏற்படும்போது இந்த எண்ணெயை வைத்து வேர்க்கால்களில் நன்றாக மசாஜ்செய்துவிட்டு, அரை மணி நேரத்தில் தலையை மிருவான ஷாம்பூ கொண்டு அலசினால், முடி உதிர்வு பிரச்னை முற்றிலும் சரியாகும்.
இளநரை பிரச்னை உள்ளவர்களும், முதுநரை உள்ளவர்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தி, அந்த முடிகளை கருமையாக மாற்ற முடியும்)
திரிபலா சூரணம்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவைதான் திரிபலா சூரணம். இதுவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். திரிபலா சூரணத்தை தலைக்கு பயன்படுத்தும்போது தலைமுடி நல்ல கருமையாக மாறத்துவங்கும்.
நீலி பிருங்காடி எண்ணெய் – 30 மி.லி.
திரிபலா சூரணம் – 20 கிராம்
செய்முறை
இதை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, குறைவான தீயில் நன்றாக சூடாக்க வேண்டும். கொதிக்க கொதிக்க நல்ல கருமை நிறமாக மாறத்துவங்கும்.
நல்ல நிறம் மாறியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும். இதை ஒரு கண்ணாடி பாட்டில்லி சேர்த்து அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
தயாரித்த எண்ணெயை இரண்டு ஸ்பூன் எடுத்து, இதனுடன் நீலிபிரிங்காடி எண்ணெயை சிறிதளவு கலந்துகொள்ள வேண்டும்.
ஹேர்டை பிரஷ் பயன்படுத்தி உங்கள் தலையில் வெள்ளை முடி அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் தடவவேண்டும். முடியின் வேர்க்கால்களில் படும் அளவுக்கு தடவவேண்டும்.
நீலி பிருங்காடி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்காது. ஆனால் தலைமுடியின் வேர்கால்களை குளிர்ச்சியாக்கி, ஊட்டத்தை கொடுக்கும். முடியை கருமை நிறமாக மாற்றும்.
இதை தலைக்கு ஹேர் டையாக தடவிவிட்டு, வெளியே கூட செல்லலாம் அல்லது தலையை அலசிவிட்டு செல்ல விரும்பினால், இதை தடவி 2 மணி நேரம் நன்றாக ஊறவிட்டு அலசினால் உங்கள் கூந்தல் கருகருவென வளர்வதை நன்றாக காண முடியும்.
ஆனால் முதல் முறை பயன்படுத்தும்போதே கருமையாகாது. இதை வாரத்தில் இரண்டு முறை என தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால், முடி பழுப்பு நிறமாகி கருமையாவதை பார்க்கலாம்.
இளநரைக்கு விரைவில் தீர்வு தரும், முதுநரைக்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
ஆனால் இதை தவிர நீங்கள் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தரும் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் தலைமுடிக்கு உடலில் இருந்து கிடைக்கும் ஆரோக்கியம் வரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்