Drumstick Masala : மட்டன் குழம்பு சுவையில் மசாலா முருங்கைக்காய்! மீண்டும், மீண்டும் ருசிக்க தூண்டும்!
Drumstick Masala : மட்டன் குழம்பு சுவையில் மசாலா முருங்கைக்காய், மீண்டும், மீண்டும் ருசிக்க தூண்டும் சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கைக்காய் மசாலா
செஃப் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் நமது ஹெச்.டி. தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்ட ரெசிபி என்ன தெரியுமா?
முருங்கைக்காயை சேர்த்தால் சாம்பாரோ அல்லது காரக்குழப்பு அல்லது எந்த உணவோ அதற்கு ருசி அதிகரித்துவிடும். இதனால்தான் முருங்கைக்காயை பொடி செய்துவைத்துக்கொண்டு, அதை சாம்பாரில் கலந்துவிடுகிறார்கள்.
அது சாம்பாரின் சுவையை மேலும் அதிகரிக்கும். இன்று செய்யும் முருங்கைக்காய் மசாலாவில் எந்த காயை சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
ஆனால் முருங்கைக்காயில் செய்யும்போது, அது முருங்கைக்காய்க்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது என்று முத்துலட்சுமி கூறினர்.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே இத்தனை நன்மைகள் நிறைந்த முருங்கைக்காயை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்று தெவித்தார்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 4
சின்ன வெங்காயம் – 3
தக்காளி – 3
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு பற்கள் – 4
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – கால் கப்
முந்திரிப்பருப்பு – 4
கசகசா – அரை ஸ்பூன்
செய்முறை
முருங்கைக்காயை கழுவி ஒரு அங்குல அளவில் நீளமாக நறுக்கிக்கொள்ளவேண்டும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பூண்டு பற்களை இடித்துக் கொண்டு, தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவேண்டும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து அரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும்.
அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவேண்டும். முருங்கைக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து வேகவைத்த தண்ணீரோடு அதன் சூட்டிலேயே இருக்கட்டும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி மற்றும் கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
கனமான மண் சட்டியில் எண்ணெய்விட்டு சூடானவுடன், வெந்தயம் சேர்த்து சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
அதோடு தட்டிய பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். அவை பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளி விழுது பாதி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் சாம்பார் பொடி சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவேண்டும். இப்போது வேகவைத்த முருங்கைக்காயை தண்ணீரோடு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும். ஆரோக்கியமான சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்