தேங்காய்ப்பால் பிரிஞ்சி பிரியாணி! பெயரே அசத்துதா? டேஸ்ட் உச்சு கொட்ட வைக்கும்! இதோ ரெசிபி!
தேங்காய்ப்பால் பிரிஞ்சி பிரியாணி, பெயரே அசத்தலாக உள்ளதா? சுவையும் நிறைந்தது. அதை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேங்காய்ப்பால் பிரிஞ்சி பிரியாணியை இப்படி செய்து பாருங்கள். அது சூப்பர் சுவையில் அசத்தும், வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
ஸ்டார் சோம்பு – 1
சோம்பு – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன்
தக்காளி – 1
புதினா, மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
கேரட் – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
உருளைக்கிழங்கு – ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
மீல் மேக்கர் – ஒரு கப் (ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
பச்சை பட்டாணி – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – அரை கப்
தேங்காய்ப்பால் – ஒன்றரை டம்ளர்
(அரை மூடி தேங்காயை துருவி ஒரே பாலாக எடுத்துக்கொள்ளவேண்டும்)
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
(20 நிமிடங்கள் ஊறவிடவேண்டும்)
எலுமிச்சை – அரைப்பழம்
பிரட் துண்டுகள் – 4
செய்முறை
அகலமான குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அடுத்து பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கியவுடன், தக்காளி சேர்த்து மசிய வேகவிடவேண்டும். அடுத்து ஒரு கைப்பிடியளவு மல்லித்தழை புதினா சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, ஊறவைத்து பிழிந்த மீல் மேக்கர் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து தேங்காய்ப்பால் சேர்த்து கொதித்தவுடன், அதில் ஊறவைத்து அலசிய பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கரி மூடி 2 விசில் விட்டு இறக்கவேண்டும்.
நீங்கள் வழக்கமாக பிரியாணியை வேக வைக்கும்படியும் செய்துகொள்ளலாம். மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து பிரட்டை சிறிய சதுர துண்டுகளாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
குக்கர் விசில் ரிலீஸ் ஆனுவுடன் இந்த பிரட் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வைக்கவேண்டும். மல்லித்தழை தூவி கலந்து எடுத்தால் சூப்பர் சுவையான தேங்காய்ப்பால் பிரிஞ்சி பிரயாணி தயார்.
வெள்ளரி ரைத்தாவுடன் பரிமாற சுகமான மதிய உணவாகும். இதற்கு காளான், பன்னீர், காளிஃப்ளவர் 65 அல்லது கிரேவி அல்லது காய்கறி குருமா அல்லது அசைவ கிரேவிகளும் நன்றாக இருக்கும். பிரியாணி பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இது அத்தனை காரமாக இருக்காது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்