Chettinadu Chicken Curry : செட்டிநாடு சிக்கன் கறி! ஒருமுறை ருசித்தால் மீண்டும் சுவைக்கத்தூண்டும்! இதோ ரெசிபி!
Chettinadu Chicken Curry : செட்டிநாடு சிக்கன் கறியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் சுவைக்கத்தூண்டும் வகையில் செய்யவேண்டுமா? இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு சிக்கன் கறி என்பது சிக்கனில் செட்டிநாடு மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை உணவு ஆகும். இதில் உள்ள சுவை உங்களை சுண்டியிழுக்கும். செட்டிநாடு சிக்கன் கறிக்கு சேர்க்கப்படும் மசாலக்கள் அனைத்தும் ஃபிரஷ்ஷாக அரைத்து சேர்க்கப்படும் மசாலக்கள் ஆகும். இதில் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் என அனைத்தும் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த செட்டிநாடு சிக்கன் கறியை நீங்கள் நெய்ச்சோறுடன் பரிமாறினால் வேண்டும், வேண்டும் என்று கேட்டு சுவைத்துக்கொண்டே இருப்பார்கள். இதை இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற அனைத்து டிஃபனுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். செட்டிநாடு சிக்கன் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செட்டிநாடு மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
பட்டை – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
கல்பாசி – சிறிதளவு
மிளகு – ஒரு ஸ்பூன்
ஸ்டார் சோம்பு – 1
வர மல்லி – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 5
சோம்பு – 1 ஸ்பூன்
தேங்காய் – கால் கப்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதில் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
மசாலா அரைக்க பட்டை, சீரகம், கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மிளகு, ஸ்டார் சோம்பு, வர மல்லி, வரமிளகாய், சோம்பு, தேங்காய் ஆகிய அனைத்தையும் பொன்னிறமாகும் வரை வறுத்து, நன்நாக ஆறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான அளவு தண்ணீர்விட்டு மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக மசாலாலை அம்மியில் அரைத்தால் குழம்பு கூடுதல் சுவை தரும். உங்களுக்கு அந்த வசதியிருந்தால் அம்மியில் அரைத்துக்கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் சிக்களையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். இதையனைத்தையும் குக்கரில் செய்தால் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு, 10 நிமிடம் அடுப்பின் தீயை குறைத்து வைக்கவேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து குக்கர் ரிலீஸ் ஆனவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது மசாலாவை சேர்த்து மூடியிட்டு நன்றாக வேகவைக்கவேண்டும். இதில் மல்லித்தழையை தூவி இறக்கினால் சூப்பர் சுவையில் செட்டிநாடு சிக்கன் கறி தயார்.
இதை இட்லி, இடியாப்பம், ஆப்பம், தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும்.
செட்டிநாடு சிக்கன் கறி உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் ருசிப்பீர்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்