Curry Leaves : கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலையில் இப்படி ஒரு தொக்கு செஞ்சு பாருங்க.. ருசி அட்டகாசமா இருக்கும்!
Curry Leaves : கறிவேப்பிலை ஏராளமான ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளில் உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தனியாக எடுத்து கீழே போடுகின்றனர். கறிவேப்பிலையில் இப்படி ஒரு தொக்கு செய்து கொடுத்து பாருங்க. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவாங்க
Curry Leaves : பழங்காலத்திலிருந்தே இந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை சேர்க்கப்பட்டு வருகிறது. கறிவேப்பிலையை மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக தினமும் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது முதல் ஏராளமான ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகளில் உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தனியாக எடுத்து கீழே போடுகின்றனர். கறிவேப்பிலையில் இப்படி ஒரு தொக்கு செய்து கொடுத்து பாருங்க. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவாங்க
கறிவேப்பிலை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 3 கப்
புளி - எலுமிச்சை அளவு
வர மிளகாய் - 2
மல்லி விதை - 1 ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு கப்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு- 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை தொக்கு செய்முறை
கறிவேப்பிலை தொக்கு செய்ய சூடான வாணலியில் ஒரு ஸ்பூன் மல்லி விதை, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடுகு வெடித்து வெந்தயம் சிவக்கும் வரை நன்றாக வறுத்து அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விட வேண்டும். பின்னர் அதே வாணலியில் கழுவி சுத்தம் செய்த 3 கப் அளவு கறிவேப்பிலையை போட்டு நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். கறிவேப்பிலை வறுக்கும் போது தேவை என்றால் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் எலுமிச்சை அளவு புளியை அதே வாணலியில் சேர்த்து நீர்ச்சத்து போகும் வரை வதக்க வேண்டும். தேவை என்றால் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து புளி பச்சை வாடை போகும் வரை வதக்கி எடுக்க வேண்டும். இப்போது ஏற்கனவே வறுத்து எடுத்த மல்லி விதை, வெந்தயம், கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் லேசாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளலாம்
பின்னர் ஒரு வாணலியில் முக்கால் கப் நல்லெண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்க வேண்டும் . அதில் 10 பல் பூண்டையும் சேர்த்து பூண்டு சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். பூண்டு வதங்கிய வின் அதில் பெருங்காய தூளை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அரைத்த பொருட்களை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். கடைசியாக தொக்கின் ருசியை கூட்ட ஒரு ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். தொக்கு எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆற விட வேண்டும். பின்னர் அந்த தொக்கை ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றி கொள்ளலாம். சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட கறிவேப்பிலை தொக்கு ருசி அட்டகாசமாக இருக்கும். உடனே செய்து பாருங்க.
குறிப்பு : நீண்ட நாட்களுக்கு தொக்கை வைத்திருக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலை அரைக்கும்போது தண்ணீருக்கு பதிலாக இரண்டு கரண்டி நல்லெண்ணெய் விட்டு அரைத்து கொள்ளலாம். வெல்லம் சேர்க்க விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம். பூண்டையும் விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்