தீபாவளிக்கு லேகியம் செய்வது எப்படி பாருங்கள்! பண்டிகை காலங்களில் வயிறு ஆரோக்கியம் காக்கப்படும்!
தீபாவளிக்கு லேகியம் செய்வது எப்படி என்று பாருங்கள். பண்டிகை காலங்களில் வயிறு ஆரோக்கியம் காக்கப்படும். வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளுக்கும் உபயோகித்துக்கொள்ளலாம்.
தீபாவளி வந்துவிட்டாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம்தான். ஒருபுறம் குழந்தைகளுக்கு பட்டாசு, புத்தாடை என குதூகலம், மறுபுறத்தில் தீபாவளி பலாகாரங்கள் என கொண்டாட்டம். பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களின் உச்சமாக தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும், இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. பண்டிகை கொண்டாட்டங்கள் என்றால், அனைவரும் குழந்தையாகவே மாறிவிடுகிறார்கள். அந்தளவுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கும். தீபாவளி நாளில் அனைவரும் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் உடுத்தி, மத்தாப்புக்கள் கொழுத்தி, பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு என நாள் முழுவதிலும் ஒரே உற்சாகமாக இருக்கும்.
வாழ்வில் ஆயிரம் இன்பங்கள், துன்பங்கள் இருந்தாலும், பண்டிகைகள் நம்மை மகிழ்விக்கும் மாற்றாக உள்ளன. இந்த நாளில் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறோம். சொந்தங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறோம். பண்டிகைகள் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்புவதாக இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதேவேளையில் அதிக பலகாரங்களை சாப்பிட்டு, வயிறு வலி, வயிறு உப்புசம் போன்றவை ஏற்பட்டால் அதில் இருந்தும் காத்துக்கொள்ள நீங்கள் வீட்டிலேயே தீபாவளி மருந்து அல்லது லேகியத்தை செய்ய முடியும். அதை செய்யும் முறை குறித்து திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும்.
தேவையான பொருள்கள்
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
சதகுப்பை – 30 கிராம்
சிறுநாகப்பூ – 50 கிராம்
வாய்விடங்கம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
லவங்கப்பட்டை – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
வர கொத்தமல்லி – 30 கிராம்
சித்தரத்தை - 30 கிராம்
ஓமம் - 30 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்
கிராம்பு - 20 கிராம்
வெல்லம்- 300 கிராம்
தேன் - 100 கிராம்
நெய் - 100 மில்லி
செய்முறை
ஒரு கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் தனித்தனியாக ஆறவைத்து அரைத்து, நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சிக்கொள்ளவேண்டும். பாகு கம்பி பதம் வந்தவுடன், அரைத்து, சலித்து வைத்துள்ள ஒவ்வொரு பொருளையும், அதில் தனித்தனியாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். நல்ல திரண்டு வரும்போது லேகிய பதம் கிடைக்கும்.
அப்போது இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி கொஞ்சம் ஆறிய பின் கொஞ்சம், கொஞ்சமாகத் தேன் விட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
தீபாவளி காலங்களில் நாம் அதிகளவில் இனிப்புகள் மற்றும் எண்ணெய் பலாகாரங்களை எடுத்துக்கொள்வோம். எனவே இந்த லேகியத்தையும் சாப்பிடவேண்டும். அப்போதுதான் வழக்கத்துக்கு மாறாக மாறும் நமது உணவு பழக்கத்தால் நமது குடல் ஆரோக்கியம் கெடாமல் இருக்கும்.
ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பின்னர் எடுத்து சப்பிச் சாப்பிடவேண்டும். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகுச் சப்பிச் சாப்பிடவேண்டும். இதை தீபாவளி காலங்கள் மட்டுமல்ல மற்ற நாட்களிலும் வயிறு தொடர்பான உபாதைகள் உள்ளதாக உணர்ந்தால் எடுத்து பலன்பெறலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்