முருங்கைக் கீரை புளிக்குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா; உடலுக்கு ஆற்றலும், ஆரோக்கியமும் கொடுக்கும்!
முருங்கைக் கீரை புளிக்குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா? உடலுக்கு ஆற்றலும், ஆரோக்கியமும் கொடுக்கும். அடிக்கடி வைத்து சாப்பிட நல்லது.
முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட உடல் பலம் அதிகரிக்கும். எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபட முருங்கைக்கீரை உதவுகிறது. முருங்கைக்கீரையின் ஈர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் பல்வேறு ரெசிபிக்களும் செய்யலாம். அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது.
முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும். மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.
தேவையான பொருட்கள்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 4
வரமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிக்கரைசல் – ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், மிளகு, சீரகம், வர மிளகாய், வரமல்லி, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தேங்காய்த் துருவல் என அனைத்தையும் வதக்கி, சூடு ஆறியவுடன் அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தக்காளி நன்றாக குழைந்தவுடன், அடுத்து எடுத்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவேண்டும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அரைத்த மசாலாவையும், புளிக்கரைசலையும் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். மிகவும் சுவையான முருங்கைக் கீரை புளிக்குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தலே போதுமானது.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்