தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet Chart: ஒரு வாரத்துக்கான சுவையான சத்தான 7 வித்தியாசமான கேரட் ரெசிப்பிகள்

Healthy Diet Chart: ஒரு வாரத்துக்கான சுவையான சத்தான 7 வித்தியாசமான கேரட் ரெசிப்பிகள்

I Jayachandran HT Tamil
Jun 17, 2023 10:41 AM IST

ஒரு வாரத்துக்கான சுவையான சத்தான 7 வித்தியாசமான கேரட் ரெசிப்பிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்துக்கான சுவையான சத்தான 7 வித்தியாசமான கேரட் ரெசிப்பிகள்
ஒரு வாரத்துக்கான சுவையான சத்தான 7 வித்தியாசமான கேரட் ரெசிப்பிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தக் கேரட்டில் ஒரு வாரத்துக்கான பல்வேறு சமையல் வகைகளை இங்கு பார்க்கலாம்.

இது இல்லத்தரசிகளுக்குப் பயனுள்ள சமையல் குறிப்பாகும்.

1 கேரட் சாம்பார்-

தேவையான பொருட்கள்:

கேரட் - கால் கிலோ

வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்

வெங்காயம்- 1

நறுக்கிய தக்காளி- 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

புளிச்சாறு- கால் கப்

சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தண்ணீர்- தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை

செய்முறை :

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்குங்கள்.

அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் தீயை குறைத்து, அதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு பின் தீயை அதிகரித்து, புளிச்சாறு, உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

அதை பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

கடைசியாக அதில் துவரம் பருப்பை சேர்த்து, சாம்பார் சற்று கெட்டியான பின், கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், கேரட் சாம்பார் ரெடி.

2. கேரட் குருமா

தேவையான பொருட்கள் :

நறுக்கிய கேரட் - அரை கிலோ

நறுக்கிய தக்காளி - 2

தேங்காய் துருவல் - அரை கப்

பச்சை மிளகாய் - 6

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

நறுக்கிய பெரிய வெங்காயம்- 3

ஏலக்காய் - 2

லவங்கம் - 2

சிறிய பட்டை - 1

மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கேரட்டை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், இலவங்கம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், வேக வைத்துள்ள கேரட், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் குருமா ரெடி.

இதனை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

3. கேரட் கூட்டு

தேவையான பொருட்கள் :

கேரட் - கால் கிலோ

துவரம் பருப்பு - 100 கிராம்

வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 2

மிளகாய் தூள் - கால் டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

எண்ணெய் - தேவைக்கேற்ப

உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்முறை :

கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பிறகு, குக்கரில் கேரட், துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேக விடவும்.

பின்னர; வேகவைத்ததுடன், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொட்டி, அவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

4. கேரட் பொரியல்

தேவையான பொருட்கள் :

கேரட் - அரை கிலோ

தேங்காய் துருவல் - அரை கப்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கேரட்டை நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி.

 

5 கேரட் ரைஸ்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய கேரட் – 2 கப்,

பாஸ்மதி ரைஸ் – ஒரு கப்,

பட்டை – ஒரு துண்டு,

கிராம்பு – 2,

ஏலக்காய் – 1,

புதினா – சிறிதளவு,

முந்திரி, பாதாம் – தலா 5,

காய்ந்த மிளகாய் – 3,

நெய் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

மல்லித்தழை – அலங்கரிக்க,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது.

பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.

கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும்.

பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

6. கேரட் மில்க் ஷேக்

தேவையானவை:

துருவிய கேரட் – ஒரு கப்,

கெட்டியான பால் – ஒன்றரை கப்,

சர்க்கரை – 2 டீஸ்பூன்,

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை: கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குங்குமப்பூவை சிறிது தண்ணீர் சேர்த்து பரிமாறவும்.

தினமும் குடிப்பதாக இருந்தால் குங்குமப்பூ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

7 கேரட் ஊறுகாய்

தேவையானவை:

சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட் – ஒரு கப்,

காய்ந்த மிளகாய் – 6,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

உப்பு – ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,

கடுகு – கால் டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கேரட் துண்டுகளை அரைவேக்காட்டில் வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கேரட் துண்டுகளைப் போட்டு அதில் வெந்தயப்பொடி, வறுத்த மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி, பிறகு கடுகு தாளித்துக் கொட்டி, எலுமிச்சை சாறை விட்டு கைப்படாமல் கலக்கி வைக்கவும். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ருசியான ஊறு காய் இது!

WhatsApp channel

டாபிக்ஸ்