சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு - பா. ரஞ்சித்
சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரத்தில் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குநர் பா. ரஞ்சித் கூறியிருப்பதோடு, தமிழக அரசியின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் விவகாரத்தில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தொழிலாளர்களை போராட விடு
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.
தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்புக்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!! #samsungprotest" என்று குறிப்பிட்டுள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 50 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இந்த போரட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்தார்.
இதையடுத்து இந்த குழு சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் அமைப்பதை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
தொழிலாளர்கள் மீது கைது நடவடிக்கை
இந்த சூழ்நிலையில், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
இதையடுத்து கைதான சாம்சங் தொழிலாளர்கள் சந்தித்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் சாம்சங் தொழிலாளர் போராட்டத்துக்கு திரைத்துறையில் இருந்து முதல் குரலாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.
அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி
முன்னதாக, சாம்சங் தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக கூறி சிஐடியூ தொழில்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி, வேல்முருகன் அமர்வில், தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியூ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.
தாமதமாகும் தங்கலான் ஓடிடி ரிலீஸ்
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்பட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தங்கலான். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ஓடிடியில் வெளியீடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. \
இந்த நேரத்தில், தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக கூடாது எனவும், அதனை தடை செய்யக் கோரி திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்கலான் திரைப்படத்தில் புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாக சித்தரிக்கும் விதமாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன.
இதனால் 'தங்கலான்' ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு காரணமாக தங்கலான் ஓடிடி வெளியீடு மேலும் தள்ளி போகலாம் என தெரிகிறது.
டாபிக்ஸ்