Pa. Ranjith: ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்.. மேடையில் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா. ரஞ்சித் - என்ன நடந்தது?-director pa ranjith speech in thangaalan movie audio launch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pa. Ranjith: ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்.. மேடையில் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா. ரஞ்சித் - என்ன நடந்தது?

Pa. Ranjith: ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்.. மேடையில் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா. ரஞ்சித் - என்ன நடந்தது?

Aarthi Balaji HT Tamil
Aug 06, 2024 03:32 PM IST

சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது என்றார் பா. ரஞ்சித்.

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்.. மேடையில் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா. ரஞ்சித் - என்ன நடந்தது?
ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்.. மேடையில் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா. ரஞ்சித் - என்ன நடந்தது?

சர்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.‌ அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில் 'அவருக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?' என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.

அவருடன் இணைந்து நின்றதற்காக அவர் செய்த விசயம் சாதாரணமானதல்ல. தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையை கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார். நான் நினைத்த ஒரு படத்தை.. எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு பெரிய ஆதரவை அவர் வழங்கினார். 

சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?..

நான் கலைக் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாக புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலை கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். 'சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்', 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' , 'சினிமா பாரடைஸ்' இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.

நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்னைகளை சொல்லலாம் என நினைத்தேன். சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன். இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாக சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாக கடத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.‌ இதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது. வரலாற்றை படிக்கும் போது நான் யார்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது. வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 

ஏன்? இவ்வளவு பாகுபாடு இருக்கிறது. ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது.. என பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால்... வரலாறு ஒரு பக்க சார்புடையதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மொழி இல்லை.‌ அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை. தேடித்தேடி பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும் எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்த படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் தீண்டப்படாதவர்கள் யார்? என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.

ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகாரமானதாக மாற்றம் அடையுமா ? என எனக்கு கணிக்க தெரியவில்லை.‌

கருத்துக்களை சொல்ல முடியுமா..?

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது. அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது. தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துக்களை சொல்ல முடியுமா..? என்ற பயமும் எழுந்தது. இந்த பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

இரண்டுக்கும் அதிக நெருக்கம்

அவருடன் உதவியாளராக நான் பணியாற்றிய போது, 'சென்னை 28' படத்தில் அவர் சென்னையின் அடையாளத்தை கிரிக்கெட் மூலமாக பதிவு செய்திருந்தார்.‌ அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தை இளைய சமுதாயத்தினர் கொண்டாடினார்கள். சென்னை 28 படத்தின் வாழ்வியலும்.. என்னுடைய வாழ்வியலும் வேறு வேறு அல்ல. இரண்டுக்கும் அதிக நெருக்கம் உண்டு.‌ அப்போது ஒரு கொண்டாட்டத்தை.. ஒரு மகிழ்ச்சியை.. சொல்லப்படாத கதைகள் மூலம் நாம் செல்லும்போது.. எளிதாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஒரு விசயத்தை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு ஏற்கனவே நான் எழுதிய பல கதைகளை ஒதுக்கிவிட்டு, 'அட்டகத்தி' படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் இருந்து நிறைய சம்பவங்களை எடுத்து அதனை சினிமாவாக உருவாக்கினேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட ஒரு கடிதத்தை எழுதி வழங்கினோம். அதில் எங்களுடைய நம்பிக்கையை சொல்லி இருந்தேன்.

மெட்ராஸ் படம் வெற்றி பெற்றதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்த படம் பிடித்ததாலும் எனக்கு 'கபாலி' படத்தின் வாய்ப்பினை வழங்கினார். எனக்கு அவருடன் பணியாற்றும்போது உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. அவருக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும். அந்தப் படம் வெற்றி பெற்றதால் தான் மீண்டும் எனக்கு 'காலா' படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

இந்தத் தருணத்தில் தான் விக்ரம் என்னை அழைத்தார். சேர்ந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்தார். விக்ரமை பல வடிவங்களில் எனக்கு பிடிக்கும். அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும்.  அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர். 'ஐ' படத்தில் ஒரு சிறிய பகுதிக்காக தன்னை மாற்றிக்கொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது. இதுபோன்றது ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.‌

முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது. இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன். இந்த கதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு. இதையெல்லாம் அவரை சந்திக்கும் போதே விவரித்தேன்.

கலைக்காக முழுதாக அர்ப்பணிப்பு

அவரும் முழுமையாக புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார். அவரிடம் கதையை கூட என்னால் ஒழுங்காக சொல்ல முடியவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்ததை அவர் முழுவதாக புரிந்து கொண்டார். 

அவர் ஒப்புக்கொண்டவுடன் அந்தத் தருணத்தில் இருந்து தான் எனக்குள் மிகப்பெரிய சவால் உருவானது. கலைக்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் ஒரு கலைஞன்.‌ அவரை கையாள்வது மிகவும் கடினமானது என எனக்குத் தெரியும். அவரை அந்த கதாபாத்திரமாக உருமாற வைப்பதில் சவால் இருந்தது.‌ அதே தருணத்தில் மக்களிடத்தில் எளிதாக சென்று சேரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தப் படத்தில் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம். ஃபேண்டஸி மேஜிக் வேர்ல்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய ஜானரில் நான் இயக்கும் திரைப்படம் இது. இந்த புதிய உலகத்திற்குள் நான் நுழையும் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் தான். இது எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.‌

விக்ரம் அந்த உலகத்திற்குள் என்னை எளிதாக பணியாற்ற வைத்தார். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சியின் போது நான் நினைத்த மாதிரி தங்கலானாக விக்ரம் வந்து நின்றார். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் அவர் காடையன் கதாபாத்திரத்தில் தோன்றும் போது என்னை ஆச்சரியப்படுத்தினார். இதற்காக நடைபெற்ற ஒத்திகையின் போதும் அவர் கலந்து கொண்டார். அவரிடமிருந்து நான் கலையை எப்படி நேசிப்பது என்ற விசயத்தை கற்றுக் கொண்டேன். ஒரு மாணவரை பரிசோதிக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியரை எப்படி பரிசோதிப்பது..? ஒரு ஆசிரியரை பரிசோதிப்பது போல் இருந்தது.

கடினமாக நடந்து கொண்டேன்

படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீசூட் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன், உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. விக்ரமிடம் வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன் என்றார். அதனால் மீண்டும் அதே காட்சியை படமாக்கினேன் இந்த விசயத்தில் அவரிடம் நான் சற்று கடினமாக நடந்து கொண்டேன். 

அதற்காக இந்த தருணத்தில் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் நோக்கம் என்னவென்றால் அவரை எப்படியாவது திரையில் தங்கலானாக கொண்டு வர வேண்டும் என்பதுதான்.  இந்த திரைப்படத்தை கருணையற்ற மனிதனாக இருந்தால் மட்டும் தான் உருவாக்க முடியும் என நான் நினைத்தேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமையாக அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். நான் ஏனைய படங்களை இயக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியாக தான் பணியாற்றுவேன். ஆனால் இந்த படத்தில் என்னை நானே வருத்திக் கொண்டு பணியாற்றினேன்.‌ இப்போது வரை மன உளைச்சலுடன்... ஒருவித தவிப்புடன் தான் இருக்கிறேன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்ற பிறகு தான் மகிழ்ச்சி அடைவேன் “ என்றார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.