TVK FLAG: ‘இரட்டை யானை’ பயன்படுத்துவோர் இத்தனை பேரா? தவெக கொடியும்.. பிரபல நிறுவனங்களும்!
TVK Vijay Flag: நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தான், தற்போதைய சமூக வலைதளத்தின் ‘டாப் டாக்’. குறிப்பாக கொடியில் உள்ள இரட்டை யானையை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு முன் யாரெல்லாம் இரட்டை யானை பயன்படுத்துகிறார்கள்? ஒரு பார்வை!
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், இன்று தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இரட்டை யானைகளை கொண்ட அவரது கொடி குறித்து சிலர் விமர்சனங்களை செய்தாலும், நிறைய பிரபலமான லோகோக்களில் இரட்டை யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றிய ஒரு பார்வை:
1.கேரள மாநில அரசின் சின்னம்
கேரள அரசின் சின்னமாக இரட்டை யானைகளை கொண்ட லட்சினை பயன்படுத்தப்படுகிறது. இரு யானைகளும் தும்பிக்கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வதைப் போன்றும், அந்த யானைகளுக்கு நடுவே, சங்கு இருப்பதைப் போன்று அம்மாநில அரசின் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் அதிக அளவில் யானைகள் இருப்பதும், தனித்துவமான அடையாளமாக யானைகள் இருப்பதும், அந்மாநில சின்னத்தின் சிறப்பாக உள்ளது.
2.முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்
இந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக அறியப்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனமும், இரட்டை யானையை கொண்ட லோகோவை பெற்றுள்ளது. இந்த நிறுவனமும் கேரளா சார்பு நிறுவனம் என்றாலும், இந்தியா முழுதும் அதன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. இரட்டை யானை லோகோ, இந்த நிறுவனத்தின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது.
3.டைம்ஸ் ஆப் இந்தியா
இந்தியாவின் பாரம்பரிய செய்தி நிறுவனங்களின் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும், இரட்டை யானைகளை கொண்ட லோகோவை பயன்படுத்துகிறது. பிரபலமான லோகோவாக அது அறியவும் படுகிறது.
4.ஃபெவிக்கால் நிறுவனம்
இந்தியாவில் பசை தொடர்பான சேவைகளை வழங்கி வரும் ஃபெவிக்கால் நிறுவனத்தின் லோகோவிலும் இரட்டை யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த லோகோவில், இரு யானைகளும் வெவ்வேறு திசையை நோக்கி நகர்ந்து செல்லும். ஒரு வலுவான பொருளை இழுக்க, அவை முயற்சி செய்யும். தங்கள் பொருளின் பலத்தை குறிக்க ஃபெவிக்கால் நிறுவனம் இப்படியான ஒரு லோகோவை வடிவமைத்திருந்தது.
5. அமேஸானின் ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’
முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேஸான், தன்னுடைய ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ ஆஃபர்களுக்கு இரட்டை யானைகளை கொண்ட லோகோவை பயன்படுத்துகிறது. விழாக்கோலம், பலமான போட்டி, பெரிய பரிசு என்பனவற்றை குறிக்கும் விதமாக, அமேஸான் இந்த லோகோவை வடிவமைத்திருக்கலாம். இதுவும் கிட்டத்தட்ட ஃபெவிக்கால் நிறுவன லோகோ போல எதிர் எதிர் திசையில் உருவத்தை கொண்ட யானைகளை பெற்றிருக்கும்.
6.மாத்தளை மாநகராட்சி லோகோ
இலங்கையில் உள்ள மாத்தளை மாநகராட்சியின் லோகோவில் இரட்டை யானைகள் இடம் பெற்றுள்ளன. கேரளாவைப் போலவே இலங்கையிலும் யானைகள் அதிகம் உள்ளன. அங்கும் பல்வேறு அரசுத்துறைகளில் யானைகளின் படங்களை கொண்ட லட்சினைகள் நிறைய பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இரட்டை யானைகளை மாத்தளை மாநகராட்சி பயன்படுத்தியது.
இதேப் போல, ஒற்றை யானையை பயன்படுத்தும் ‘தேவர் பிலிம்ஸ்’ போன்ற நிறைய பிரபல நிறுவனங்களும், அரசுத்துறை நிறுவனங்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளன. அந்த வரிசையில், தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தன்னுடைய கொடியின் சின்னத்தில் இரட்டை யானையை பயன்படுத்தியுள்ளது.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பெயர்களும், படங்களும் விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டவை அல்ல. ஒப்பீட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்