நான் யானை இல்ல.. குதிரை, டக்குன்னு எழுந்திருப்பேன்! மேடையில் பேசிய ரியல் பஞ்ச் - ரஜினியின் பவர்ஃபுல்,தத்துவ டயலாக்குகள்
நான் யானை இல்ல.. குதிரை, டக்குன்னு எழுந்திருப்பேன் என்று மேடையில் ரஜினி பேசிய ரியல் பஞ்ச் வசனத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ரஜினியின் மறக்கமுடியாத, கவனிக்கப்பபடாத பவர்ஃபுல், தத்துவ டயலாக்குகள் சிலவற்றை பார்க்கலாம்
பிப்ரவரி 14 காதலர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என சில நாள்களும், அந்த நாளின் சிறப்பும் மறக்க முடியாதோ, அதைப் போல் டிசம்பர் 12 என்றாலே அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்ற தமிழ் சினிமா ரசிகர்களினி மனதில் கடந்த நான்கு தசாபாத்தங்களாக பதிந்து போன விஷயமாக உள்ளது.
1950, டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1975 முதல் தற்போது வரை 49 வருடங்கள் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த் இந்தியாவின் உலக அடையாளமாக திகழ்கிறார்.
நடிப்பு, ஸ்டைல், ஸ்கீரின் பிரசென்ஸ் என திரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்பவராக இருக்கிறார் என்றால், நிஜ வாழ்க்கையில் எளிமை, எதார்த்த பேச்சு மூலம் பலரது மனங்களில் குடிபுகுந்துள்ளார்.
ரஜினி என்றாலே அவரது ஸ்டைல், நடிப்பு போல் பல்வேறு படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள் நினைவுக்கு வருவதுண்டு. அந்த வகையில் ரஜினியின் சில மறக்க முடியாத பவர்ஃபுல் மற்றும் தத்துவ மழை பொழியும் விதமாகவும், ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எதார்த்தமாக அப்ளை ஆகும் விதமாகவும் இருக்கும் பஞ்ச் வசனங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
ரஜினியின் முதல் பஞ்ச் வசனம்
மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதன் பின்னர் தொடர்ச்சியாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரஜினி, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக தனது ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்திருப்பார். சிவக்குமார், சுமித்ரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், சிவக்குமார் நெகடிவ் கதாபாத்திரத்திலும், ரஜினிகாந்த் பாஸிடிவான வேடத்திலும் தோன்றியிருப்பார்கள்.
படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சியில், 'கடப்பாரையை முழுங்கிட்டு சுக்கு தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்தக் கிழிச்சிட்டு வெளிய வந்துரும்' என பேசுவார். திரையில் ரஜினி பேசிய முதல் பஞ்ச் பஞ்ச் வசனம் இதுதான்.
புவனா ஒரு கேள்விக்குறி வெற்றியால் அதைப்போன்ற பாஸிடிவ் வேடங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த ரஜினி, பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். ஆக்ஷன் ஹீரோவா வலம் வந்த அவரை பாசக்கார அண்ணனாக காட்டிய மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும் படத்தில் பேசிய "கெட்டப்பயன் சார் இந்த காளி", பஞ்ச வசனங்களில் கல்ட் கிளாசிக்காக இருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் மற்றொரு பஞ்ச் ஆக "பரவாயில்ல சார், கேவலம் மனுசங்கதான நம்ம" வசனம் உள்ளது.
16 வயதினேலே "இது எப்டி இருக்கு", முரட்டுக்காளை "சீவிடுவேன்", மூன்று முகம் "தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும், அலெக்ஸ் பாண்டிக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ படிக்கும்" போன்ற பஞ்சுகள் இந்த வகையறாக்களாகத்தான் இருக்கின்றன.
இந்த காலகட்டத்தில் ரஜினி, கமல், ஸ்ரீகாந்த் நடித்த விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற படமான அவள் அப்படித்தான் படத்தில் பெண்களின் சமத்துவம் பற்றி "பிறப்புலையும் சரி, சமத்துவத்திலையும் சரி, படுக்கையறையிலும் சரி ஆணும் பெண்ணும் சமமா இருக்கவே முடியாது", "தண்ணீ போடுறவன் கண்ணுக்கு ஒரு தீர்க சக்தி உண்டு" போன்ற ரஜினி பல பஞ்ச் வசனங்கள் மிகவும் பிரபமானவையாக இருக்கின்றன
ரஜினியின் பவர்ஃபுல் பஞ்ச் வசனங்கள்
போகிற போக்கில் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ரஜினி பேசிய பல்வேறு வசனங்கள் வாழ்க்கையுடன் பொருந்தி போகக்கூடிய பவர்ஃபுல் பஞ்ச்களாக மாறியுள்ளன. அந்த வகையில் ரஜினியின் சில கவனிக்கப்படாத பவர்ஃபுல் பஞ்ச் வசனங்கள் இதோ
மன்னன் படத்தில் விஜயசாந்தியிடம் "பொம்பலைங்களா மதிக்கிறவன் தான் ஆம்பல. ஆம்பலங்களை மதிக்கிறவ தான் பெம்பல", "அன்புக்கு கட்டுப்படுவேன். ஆணவத்த கட்டுப்படுத்துவேன்"
படிக்காதவன் படத்தில் "இந்த உலகத்தில அன்பு, பாசம், சொந்தம் பந்தம் இதுக்குதான் அடிமையா இருக்கனும்"
அண்ணாமலை படம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது, பணம் அளவா இருந்தா அது நம்மள காப்பாத்தும், அளவுக்கு மீறி இருந்தா அதை நாம காப்பதனும்
ரஜினியின் மெகா ஹிட் படமாக இருந்து வரும் பாட்ஷா படத்தில் இடம்பிடித்திருக்கும் அதிகம் கவனிக்கப்படாத பஞ்ச் வசனமாக தன்னை கொல்ல திட்டம் தீட்டும் தேவனை பார்த்து ரஜினி, "எப்போ நீ ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சயோ, அப்போவே நீ என் முதுகுல குத்தப்போறன்னு தெரிஞ்சு பேச்சு" என்பார்.
"புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்க பூசல் தீர கோர்ட் ரூமுக்கோ, டாக்டர் ரூமூக்கோ போக வேண்டாம். பெட்ரூம் வந்துட்டா போதும்ல"
நெற்றிக்கண் படத்தில், "ஆண்டவனை கூட பகைச்சிடலாம். அரசியல்வாதியை பகைச்சிட கூடாது", முத்து படத்தில், "ஏமாத்துறவன விட ஏமாறுறவன் தான் குற்றவாளி", என இப்படி ஏராளமான வசனங்களை பேசியுள்ளார்.
பஞ்ச் வசனத்தில் தத்துவமழை பொழிந்த ரஜினி
அதேபோல் தனது வசனங்கள், டயலாக் டெலிவரி மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை வெளிப்படுத்தி தத்துவமழையும் பொழிந்திருக்கிறார் ரஜினி.ந அந்த வகையில் ரஜினியின் சில தத்துவ வசனங்கள் சில,
பாண்டியன் படத்தில், "வியாதி இல்லாத உடம்மும், வேதனை இல்லாத மனசும் தான் உண்மையான சொத்து. அதுதான் நிறைவான வாழ்க்கை"
பாட்ஷா படத்தில், "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய குடுப்பான் ஆனா கைவிட்டுருவான்"
தர்மதுரை படத்தில், "நல்லவனா இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவனா இருக்ககூடாது"
படையப்பா படத்தில், " கஷ்ட்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது"
கோச்சடையான் படத்தில், " எதிரிகளை தண்டிக்க ஆயிரம் வழி இருக்கு. அதில் முதல் வழி மன்னிப்பு" போன்ற பல ஒன் லைன் பஞ்ச்கள் இருக்கின்றன.
மேடையில் ரியல் பஞ்ச் பேசிய ரஜினி
சினிமாவில் மட்டுமல்லாமல் சினிமா தொடர்பான மேடைகளிலும், குட்டி கதை மற்றும் வசனங்கல் மூலம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளார் ரஜினிகாந்த். படையப்பாவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிறிய இடைவெளி விட்டு ரஜினிகாந்த் நடித்த பாபா படம் எதிர்பார்த்த லாபத்தை பெற்ற தரவில்லை.
இதனால் மிக பெரிய வெற்றி தர வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருந்த நிலையில், பி. வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் ரிலீசுக்கு முன் இசைவெளியீட்டு விழாவில் பேசியபோது, "நான் யானை இல்ல, குதிரை. டக்குன்னு எழுந்திருப்பேன்" எனது கம்பேக் கொடுப்பது பற்றி பஞ்ச் ஆக பேசினார் ரஜினி. சொன்னது போலவே அதை செய்தும் காட்டினார்.
வெறும் நடிப்பு, ஸ்டைல் மட்டுமல்லாமல் தனது பஞ்ச்களால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவராக உள்ளார்.
டாபிக்ஸ்